2014-03-14 16:58:14

சிரியாவில் போர் நிறுத்தம் இடம்பெற ஆயர்கள் அழைப்பு


மார்ச்,14,2014. சிரியாவில் போர் நிறுத்தம் இடம்பெற வேண்டுமென்றும், ஜெனீவா அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடரப்பட்டு, நாட்டில் போர் முடிவடைவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுள்ளனர் ஆயர்கள்.
சிரியாவின் தற்போதைய போர்ச் சூழலை முன்னிட்டு லெபனன் நாட்டில் கூட்டம் நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ள சிரியா ஆயர்கள், போரினால் நாட்டுக்குள்ளேயும், நாட்டுக்கு வெளியேயும் புலம்பெயர்ந்துள்ள மக்களின் துன்பங்களை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு விசுவாசிகளைக் கேட்டுள்ளனர்.
தவக்காலத்தில் உண்ணாநோன்பு இருந்து துன்புறும் மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ள ஆயர்கள், சிரியா அரசுடனும், மக்களுடனும் தங்களின் தோழமையுணர்வையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆலயங்கள், மசூதிகள் என வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்படுவதைக் கண்டித்துள்ள சிரியா ஆயர்கள், தீவிரவாதத்தின் அனைத்து வகையான செயல்களும் கைவிடப்படுமாறும் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓராண்டை நிறைவுசெய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குத் தங்களின் நல்வாழ்த்துக்களையும் செபங்களையும் தெரிவித்துள்ளனர் சிரியா ஆயர்கள்.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.