2014-03-13 15:51:17

வத்திக்கான் உயர் அதிகாரிகளின் ஆண்டு தியானத்தின் நான்காம் நாள் சிந்தனை


மார்ச்,13,2014. இயேசு இவ்வுலகில் பயன்படுத்திய மொழி, எளிய மக்களால், குறிப்பாக, துன்புறும் மக்களால் புரிந்துகொள்ளக்கூடிய மொழியாக இருந்தது என்று அருள் பணியாளர் ஆஞ்செலொ தே தொனாத்திஸ் அவர்கள் கூறினார்.திருத்தந்தையும் வத்திக்கான் உயர் அதிகாரிகளும் மேற்கொண்டு வரும் ஆண்டு தியானத்தை வழிநடத்தும் அருள் பணியாளர் தொனாத்திஸ் அவர்கள், நான்காம் நாள் தியானத்திற்கு வழங்கிய சிந்தனையில் இவ்வாறு கூறினார்.
இறைவனின் அன்புக்குச் சான்று பகரும் வழிகளில் நம்மைப் பேசவிடாமல் தடுக்கும் இவ்வுலக மொழிகளுக்குச் செவிகொடுக்காமல் இருக்க நாம் பழகவேண்டும் என்று அருள் பணியாளர் தொனாத்திஸ் அவர்கள், வத்திக்கான் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தன் மூன்றாம் நாள் சிந்தனையாக தீய ஆவி பிடித்த ஒருவரை இயேசு குணப்படுத்திய நிகழ்வைக் குறித்துப் பேசிய அருள் பணியாளர் தொனாத்திஸ் அவர்கள், தொடர்ந்து அந்த நிகழ்வையொட்டியே தன் சிந்தனைகளை வழங்கினார்.
இயேசுவால் குணமாக்கப்பட்ட அந்த மனிதர் நற்செய்தியைப் பரப்பும் பணியாளராக ஊரெங்கும் சென்று இயேசுவிடமிருந்து தான் பெற்ற நன்மைகளைப் பறைசாற்றினார் என்று அருள் பணியாளர் தொனாத்திஸ் அவர்கள் விளக்கினார்.
மாற்கு நற்செய்தி 5ம் பிரிவில் கூறப்பட்டுள்ள இந்த நிகழ்வை அடுத்து, இரத்தப் போக்குடைய பெண் ஒருவரை இயேசு குணமாக்கிய நிகழ்வையும் அருள் பணியாளர் தொனாத்திஸ் அவர்கள், தன் சிந்தனைகளில் பகிர்ந்துகொண்டார்.
இயேசுவை அடைவதற்கு நாம் பல உயர்வான கட்டுமானங்களை அமைத்தும், அவரைக் காணமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்தப் பெண்ணைப்போல, எளியவர்கள், எவ்வித ஏற்பாடுகளும் இல்லாமல் இயேசுவைத் தொட்டுவிடுகின்றனர் என்று அருள் பணியாளர் தொனாத்திஸ் அவர்கள், திருத்தந்தையும் வத்திக்கான் உயர் அதிகாரிகளும் மேற்கொண்டு வரும் ஆண்டு தியான சிந்தனைகளின் நான்காம் நாள் விளக்கிக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.