2014-03-13 15:53:04

புனித இஞ்ஞாசியார் சொல்லித்தந்த பாடங்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்மீகத்தில் தெளிவாக வெளிப்படுகிறது - La Civiltà Cattolica இதழின் ஆசிரியர்


மார்ச்,13,2014. இவ்வுலகிற்கு தன் கதவுகளைத் திறந்துவிடும் திருஅவையாக கத்தோலிக்கத் திருஅவையை வெளிப்படுத்தியது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் ஆண்டு பணியின் ஒரு முக்கிய அம்சம் என்று உரோம் நகரில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற கத்தோலிக்க இதழின் ஆசிரியர் கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மனம்விட்டுப் பேசிய முதல் நேர்காணலைப் பதிவு செய்த La Civiltà Cattolica இதழின் ஆசிரியர், இயேசு சபை அருள் பணியாளர் Antonio Spadaro அவர்கள், திருத்தந்தையின் முதல் ஆண்டு பணிகள், திருஅவையின் தலைவர் என்ற முறையில் அவர் வழங்கிய பாடங்கள் ஆகியவை குறித்து வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவரைச் சுற்றி இருக்கும் எதார்த்தங்களின் அடிப்படையில் ஒருவரின் ஆன்மிகம் உருவாகவேண்டும் என்று புனித இஞ்ஞாசியார் சொல்லித்தந்த பாடங்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்மீகத்தில் தெளிவாக வெளிப்படுகிறது என்று அருள் பணியாளர் Spadaro அவர்கள், எடுத்துரைத்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆழமான அமைதியை ஒவ்வொரு நாளும் உணர்வதால், திருஅவையைச் சூழ்ந்துள்ள பிரச்சனைகளைக் குறித்து நன்கு அறிந்துள்ளபோதிலும், அப்பிரச்சனைகள் தன் உள்ளத்தின் அமைதியைக் குலைக்காதவண்ணம் வாழ்வதையும் நாம் காணமுடிகிறது என்று அருள் பணியாளர் Spadaro அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.