2014-03-13 16:06:36

இலங்கையில் மனிதப் புதைகுழிகளை காவல்துறை ஆய்வு செய்ய அனுமதி


மார்ச்,13,2014. இலங்கையின் வடக்கே மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளுடன் கிடைத்துள்ள தடயப் பொருட்களின் அடிப்படையில் விரிவான ஆய்வுகளை நடத்துவதற்கான உத்தரவை மன்னார் மாவட்ட நீதிமன்றம் இச்செவ்வாயன்று வழங்கியது.
இது தொடர்பாக மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை ஆராய்ந்த நீதிபதி ஆனந்தி கனகரத்தினம் அவர்கள், அதற்கான அனுமதியை வழங்கியிருக்கின்றார்.
கடந்த டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து 32 தினங்கள் நடத்தப்பட்ட அகழ்வின்போது 84 மனித எலும்புக்கூடுகளும் வேறு சில தடயங்களும் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளுக்குரியவர்கள் ஆண்களா பெண்களா?, அவர்களுடைய வயதென்ன?, அவர்கள் எப்படி இறந்திருப்பார்கள்? என்பவற்றைக் கண்டறிவதற்கான பகுப்பாய்வுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருகின்றன.
இந்த ஆய்வறிக்கைகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் தொடர்ந்து அந்தப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்படுமா என்ற கேள்விக்கு, அது குறித்து நீதிமன்றமே முடிவு செய்யும் என்று காவல்துறையின் சார்பில் பேசிய அஜித் ரோகண அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.