2014-03-12 15:58:44

வறியோர் மட்டில் திருத்தந்தை காட்டும் அக்கறை வாய்வார்த்தைகளாக இல்லாமல், வாழ்விலும் வெளிப்படுகிறது - உரோம் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர்


மார்ச்,12,2014. 'வறியோருக்காகப் பணியாற்றும் வறியத் திருஅவை' என்ற கருத்தை கத்தோலிக்கத் திருஅவையில் ஆழமாகப் பதித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் என்று உரோம் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் அருள் பணியாளர் Fierce Henry அவர்கள் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப்பணி துவக்கப்பட்ட முதல் ஆண்டையொட்டி, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், அருள் பணியாளர் Henry அவர்கள், காரித்தாஸ் அமைப்பிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றியுள்ள உதவிகளை நினைவுகூர்ந்தார்.
திருத்தந்தைக்குப் பரிசாக வழங்கப்பட்ட Harley Davidson என்ற புகழ்பெற்ற இரு சக்கர வாகனம், ஏலத்தில் விற்கப்பட்டு, அதன் தொகை, வறியோரைப் பராமரிக்கும் ஓர் இல்லத்திற்கு அளிக்கப்பட்டதை சிறப்பாக நினைவுக் கூர்ந்த அருள் பணியாளர் Henry அவர்கள், கிறிஸ்துவை மையமாகக் கொண்டிராத பிறரன்புப் பணிகள், திருஅவையை ஓர் அரசுசாரா அமைப்பாக மாற்றும் என்று திருத்தந்தை கூறியதையும் நினைவுகூர்ந்தார்.
வறியோர் மட்டில் திருத்தந்தை காட்டும் அக்கறை வெறும் வாய்வார்த்தைகளாக இல்லாமல், அவர் வாழ்விலும் வெளிப்படுவதை கடந்த ஓராண்டு இவ்வுலகம் கண்டு வருகிறது என்றும் அருள் பணியாளர் Henry அவர்கள், தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.