2014-03-12 16:03:39

மின்னல்கள் நிலநடுக்கத்தை குறிப்புணர்த்துமா?


மார்ச்,12,2014. நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு வானில் தோன்றும் வெளிச்சக் கீற்றுகள், பூமியில் ஏற்படும் அசைவுகளால் இருக்கலாம் என அமெரிக்க அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
பூமியில் இருக்கும் மண் படிமங்கள் நகர்வதால் மாபெரும் மின்சக்தி உருவாகி அதனால் இந்த வெளிச்சப் பொறிகள் உருவாகலாம் என்று கூறும் அறிவியலாளர்கள், சீனா மற்றும் இத்தாலியில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கங்களுக்கு முன்பு வானில் வெளிச்சம் ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தானிய மாவுகள் அடங்கிய பெட்டிகளை முன்னும் பின்னுமாக தொடர்ந்து தள்ளியபோது, மாவில் பிளவு ஏற்பட்டு 200 வோல்ட் மின்சார சக்தி உருவாகியுள்ளதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதே செயல்பாடு, மண் படிமங்களில் ஏற்படும் போது லட்சக்கணக்கான வோல்ட் திறன் கொண்ட மின்சக்தி உருவாகும். இதுவே வானில் வெளிச்சமாக உருவாகி, நிலநடுக்கம் வரப் போவதற்கான அறிகுறியாக காண்பிக்கிறது என கூறலாம் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.
ரட்கர்ஸ் (Rutgers) பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் செய்த ஆய்வுகளின் முடிவுகள், டென்வரில் (Denver) நடைபெற்ற அமெரிக்க இயற்பியல் கழகக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டன.
நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு வானில் வெளிச்சம் ஏற்படுகிறது என 300 ஆண்டுகளாகவே சொல்லப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக ‘யூ டியூப்’ போன்ற இணையத்தளங்கள் வந்த பின்னர், வானில் ஏற்பட்ட வெளிச்சங்கள் தெளிவாக படம்பிடிக்கப்பட்டு அவற்றை உலகத்தில் இருக்கும் ஆய்வாளர்கள் பார்ப்பதற்கான வசதிகள் ஏற்பட்டுவிட்டன.
ஜப்பானின் புகுஷிமா (Fukushima) மற்றும் இத்தாலியின் லாகிலாவில் (L’Aquila) நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு வானில் ஏற்பட்ட வெளிச்சங்கள் தெளிவாக படம்பிடிக்கப்பட்டு இணையத்தில் ஏற்றப்பட்டன.
நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ள பகுதிகளில் ஏற்படும் மின்சக்தியை அளவிடுவதற்காக துருக்கி ஆய்வாளர்கள் கோபுரங்களை நிறுவியுள்ளனர். இதில் ரிக்டர் அளவுகோலில் 5க்கு மேல் பதிவாகும் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கைகள் இருப்பதை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இத்தகைய ஒளி உருவாவதன் காரணங்களை இன்னும் தீர ஆய்வு செய்யவேண்டும் என்றும், தற்போது காணப்படும் தரவுகள் இந்த ஆய்வின் முதல் படிகளே என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.