2014-03-12 15:55:39

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியத் திருஅவையின் பணிகளுக்குப் பெரும் பக்கபலமாக விளங்குகிறார் - கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ்


மார்ச்,12,2014. வறியோரை, தன் தலைமைப் பணியின் விருப்பத் தேர்வாகக் குறிப்பிட்டு பேசிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியத் திருஅவையின் பணிகளுக்குப் பெரும் பக்கபலமாக விளங்குகிறார் என்று மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப் பணியேற்ற முதல் ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்து பேசிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், திருத்தந்தை விடுக்கும் ஒவ்வொரு செய்தியும் உலகின் மனசாட்சியைத் தட்டியெழுப்புகிறது என்று கூறினார்.
திருப்பீடத் துறைகளில் மாற்றங்களைக் கொணரும் ஒரு முயற்சியாக திருத்தந்தை அவர்கள் உருவாகியுள்ள கர்தினால்கள் அவையில் தனக்கு ஒரு பங்கு அளித்துள்ளதை நினைவுகூர்ந்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், திருஅவையில் உருவாகவேண்டிய மாற்றங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வில் ஆரம்பமாகவேண்டும் என்பதை தன் சொல்லாலும் செயலாலும் திருத்தந்தை வெளிப்படுத்துகிறார் என்று சுட்டிக்காட்டினார்.
மார்ச் 13, இவ்வியாழனன்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள், நன்றித் திருப்பலி நிறைவேற்றுகிறார் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப் பணியேற்ற மார்ச் 19ம் தேதியன்று, கர்தினால் கிரேசியஸ் அவர்களின் தலைமையில் இயேசுவின் புனிதப் பெயர் பேராலயத்தில் கூட்டுத் திருப்பலி நடைபெறும் என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.