2014-03-12 15:54:51

அமைதி ஆர்வலர்கள் –1910ல் நொபெல் அமைதி விருது
(Permanent International Peace Bureau)


மார்ச்,12,2014. வன்முறையற்ற, மோதல்களைத் தூண்டாத, வன்முறை பயமற்ற வாழ்வால் வரும் சுதந்திரத்தால் குறிக்கப்பட்ட நல்லிணக்க வாழ்வே அமைதி. அமைதி என்பதற்கு சிலர் இவ்வாறு விளக்கம் சொல்கின்றனர். போர்களின்றி, இரத்தும் சிந்துதல் இன்றி நிம்மதியாக வாழவேண்டுமென்றே உலக மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அரசுகளின் அல்லது இனங்களின் செயல்பாடுகள் அமையாததால் கிளர்ச்சிகளும் கொந்தளிப்புகளும் வெடித்தவண்ணம் உள்ளன. தனி மனிதரில் அமைதி இருந்தால் சமூகத்தில் அமைதி ஏற்படும் என புத்தமதம் போதிக்கிறது. அமைதிக்கு அடிப்படையானதும் இன்றியமையாததுமாக இருக்க வேண்டியது நீதி என்றும், நீதி இல்லாத சமூகத்தில் அமைதி இருக்க முடியாது என்றும், எனவே அமைதிக்கு வன்முறை இல்லாமை மட்டுமன்றி, நீதியும் இருக்கவேண்டியது அவசியம் என்று காந்திஜி கருதினார். உலகில் மனிதர் தோன்றியதுமுதல் இன்றுவரை காழ்ப்புணர்வுகளும் கொலைகளும் தொடர் நிகழ்ச்சிகளாக இருந்து வருகின்றன. முதல் பெற்றோரின் மூத்த மகன் காயின் தனது தம்பி ஆபேலைக் கொலை செய்தார். எனவே மனிதர் மத்தியில் கருத்து முரண்பாடுகளும், கருத்து மோதல்களும் ஏற்பட்டு அவை பகைமையை வளர்த்து அமைதியான வாழ்வைக் குலைத்து விடுகின்றன. பலர் பயந்து கொண்டே வாழ்கின்றனர். எனவே உலகினர் மத்தியில் அமைதியை நிலைநாட்ட பல ஆர்வலர்கள் தனிப்பட்ட முறையிலும், நிறுவனங்களை அமைத்தும் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு விருதுகள் வழங்கி இவர்களின் பணிகளும் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.
நொபெல் விருதை உருவாக்கிய ஆல்ஃப்ரெட் நொபெல் என்பவர் பற்றி நமக்குத் தெரியும். 1833ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதி ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக் ஹோமில் பிறந்த இவர், தனது தந்தையைப் பின்பற்றி வெடிமருந்து தயாரிப்பதில் ஆர்வமுடையவராகவும் இருந்தார். 16 வயதிலேயே சிறந்த வேதியியலாளராகவும் ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், ஜெர்மன், இரஷ்யன், ஸ்வீடிஷ் ஆகிய மொழிகளைச் சரளமாகப் பேசவும் கற்றுக்கொண்டார் ஆல்ஃப்ரெட். நைட்ரோ கிளிசெரின் (Nitroglycerin) என்னும் திரவம்மிகுந்த சக்தி வாய்ந்த வெடிமருந்தை இவர் முதலில் கண்டுபிடித்தார். 1867ல் டைனமைட்டையும் இவர் கண்டுபிடித்தார். இவர் உயிரோடு இருந்தபோதே இறந்துவிட்டார் என எழுதி, இவரைக் கடுமையாக விமர்சித்து இவர் பற்றி மோசமாக எழுதப்பட்ட செய்தியே நொபெல் அமைதி விருது உட்பட ஐந்து நொபெல் விருதுகள் உலகில் ஆண்டுதோறும் வழங்கப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. இந்த விருதுகளில், அமைதி விருது பெற்றவர்களை நாம் இந்தத் தொடர் நிகழ்ச்சியில் கேட்டு வருகிறோம். 1901ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுவரை இவ்விருது 94 தடவைகள் 126 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை 101 தனிமனிதர்களும், 25 நிறுவனங்களும் பெற்றுள்ளனர். IPB என்ற அனைத்துலக அமைதி நிறுவனத்துக்கு இந்த நொபெல் அமைதி விருது 1910ம் ஆண்டில் வழங்கப்பட்டது. பல்வேறு நாடுகளின் அமைதிக் கழகங்களின் இணைப்பாகச் செயல்படும் இந்நிறுவனத்தின் பணிகளைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டது.
1891ம் ஆண்டில் உரோம் நகரில் மூன்றாவது உலக அமைதி மாநாடு நடந்தது. இதன் பயனாக உருவானதே இந்த அனைத்துலக அமைதி நிறுவனம். இது, உலகிலே மிகப் பழமையான அமைதி நிறுவனமாகும். சுவிட்சர்லாந்து நாட்டின் பெர்னில் உருவான இந்நிறுவனத்தின் முதல் தலைவர் Fredrik Bajer. இந்நிறுவனம் உருவாகுவதற்கு முக்கிய காரணிகளாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். இவர் 1908ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்றவர். இந்த நிறுவனத்தின் முதல் பொதுச் செயலராக இருந்த Eli Ducommun என்பவர் 1902ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்றவர். பின்னாளில் இதன் தலைவராக இருந்த Henri La Fontaine என்பவர், இந்தத் தலைமைப் பணியில் ஆற்றிய சேவைகளைப் பாராட்டி 1913ம் ஆண்டில் இவருக்கும் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. 2012ம் ஆண்டுவரை இந்த நிறுவனத்தின் மேலும் 11 உறுப்பினர்கள் நொபெல் அமைதி விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு அமைதிக் கழகங்களின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், பன்னாட்டு அளவில் இடம்பெறும் பிரச்சனைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணவும் IPB என்ற இந்த அனைத்துலக அமைதி நிறுவனம் உருவாக்கப்பட்டது. தொடக்க காலங்களில் உலகின் பல்வேறு அமைதி நிறுவனங்கள் இதனோடு தொடர்பு கொண்டிருந்தன. போர் ஒழிப்பு நடவடிக்கைகள், பிரச்சனையில் ஈடுபட்டுள்ள இருதரப்பிலும் அமைதி உடன்பாடு ஏற்படுவதற்கு முயற்சிகள், நிலையான பன்னாட்டு நீதிமன்றம் அமைப்பது, நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பும் பேச்சுவார்த்தையும் ஏற்பட உதவுவது போன்ற முக்கிய பணிகளில் ஈடுபடத் திட்டமிட்டு அதன்படி செயல்படவும் முனைந்தது IPB அமைதி நிறுவனம். பின்னர் இந்தத் தனது கருத்துக்களையும், திட்டங்களையும் பல இடங்களுக்கும் பரப்புவதற்கு விரும்பியது இந்த அனைத்துலக அமைதி நிறுவனம். அதனால் இந்நிறுவனம் ஆண்டுதோறும் அமைதி மாநாடுகள் நடத்தியது. ஆண்டுப் புத்தகம் மற்றும் பிற தொடர்புகள் மூலமாக, அமைதிக்காக உழைக்கும் தனியாள்களுக்கும் நிறுவனங்களுக்கும் தகவல்களை வழங்கியது.
முதல் உலகப் போர் இந்த அனைத்துலக அமைதி நிறுவனத்தின் பணிகளுக்குத் தடையாய் இருந்தது மட்டுமல்ல, அமைதிக் கழகங்களின் அனைத்துலக ஒன்றியம் முடிவுக்கு வரவும் காரணமானது. IPB நிறுவனத்தால், மற்ற அனைத்துலக நிறுவனங்களுக்கு மத்தியில் முன்புபோல் தலைமை வகித்துச் செயல்பட இயலவில்லை. அதனால் இந்த IPB நிறுவனம் தனது வழியில் அமைதிக்கான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியது. 1924ம் ஆண்டில் IPB நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஜெனீவாவுக்கு மாற்றப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை ஜெனீவாவில்தான் IPB நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இந்நிறுவனத்தின் பணிகள், தொழில்நுட்ப மற்றும் கருத்தியல் காரணங்களால் நிறுத்தப்பட்டன. இதன் சொத்துக்கள், சுவிஸ் அதிகாரிகளின் மேற்பார்வையின்கீழ் வந்தது. 1946ம் ஆண்டில் இதன் உறுப்பினர்களில் சிலர் கூடி இந்நிறுவனம் மீண்டும் செயல்படுவதற்கான முயற்சிகளில் இறங்கினர். அதன் பயனாக ILCOP என்ற அமைதி நிறுவனங்களின் பன்னாட்டு பிணைப்புக் குழு என்ற பெயரில் செயல்படத் தொடங்கியது. பல ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், சுவிஸ் கூட்டுக் கழகம் 1961ம் ஆண்டு சனவரி 20ம் தேதி, பழைய IPB நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வழித்தோன்றலாக அங்கீகரிக்கப்பட்டது. இதன் சொத்துக்கள் ILCOP நிறுவனத்துக்கும், இதன் நூலகம் ஜெனீவாவிலுள்ள ஐ.நா.நிறுவனத்துக்கும் கொடுக்கப்பட்டன.
சிறிது காலத்துக்குள் ILCOP நிறுவனம், மீண்டும் IPB நிறுவனமாக பெயரை மாற்றிக்கொண்டது. அமைதிக்கும், அனைத்துலக ஒத்துழைப்புக்கும் உழைக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், தேசிய அமைதி அவைகள், அமைதிக்கு இயக்கங்களை ஒருங்கிணைக்கும் பிற கூட்டமைப்புகள், அமைதிக்கும், அனைத்துலக ஒத்துழைப்புக்கும் நேரடியாக உழைக்கும் தேசிய அமைப்புகள் IPB நிறுவனத்தின் உறுப்பினராகலாம். அனைத்துலக ஒத்துழைப்பையும், பன்னாட்டு அளவில் இடம்பெறும் சண்டைகளுக்கு வன்முறையற்ற வழிகளில் தீர்வு காணப்படுவதை ஊக்குவிப்பது IPB நிறுவனத்தின் தற்போதைய நோக்கமாக இருந்து வருகிறது.
உலக அமைதி ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து தொடங்குகின்றது. குடும்பங்களில் அமைதி நிலவினால், வீதிகளில் அமைதி உண்டாகும். அது ஊருக்குள்ளும், ஊர்களுக்கிடையிலும், பின் மாநிலங்களுக்கிடையிலும், இறுதியில் நாடுகளுக்கிடையிலும் அமைதியை உருவாக்கும். எனவே, நம் குடும்பங்களில் அமைதியை, சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிப்போம். அதற்கு ஒரு வழி, நம் குழந்தைகளிடையே தோன்றும் பிணக்குகள், சண்டை சச்சரவுகளைத் தக்க முறையில் கையாண்டு, அமைதியுடன் வாழச் செய்தலாகும். அதற்கான பயிற்சிகளை நம் வருங்காலத் தலைமுறைகளான குழந்தைகளுக்கு வழங்குவோம். அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்.








All the contents on this site are copyrighted ©.