2014-03-11 14:58:04

விவிலியத்
தேடல் பெரிய விருந்து உவமை பகுதி - 7


RealAudioMP3 தென் ஆப்ரிக்கா இனவெறியில் இறுகிப்போயிருந்த ஆண்டுகளில் ஒரு நாள், Johannesburgலிருந்து விமானம் ஒன்று கிளம்பத் தயாராக இருந்தது. விமானம் கிளம்புவதற்கு முன், வெள்ளை இனத்தைச் சேர்ந்த ஒரு பெண், விமானப் பணிப்பெண்ணை உரத்தக் குரலில் அழைத்தார். பதறிப்போய் அங்கு சென்ற பணிப்பெண்ணிடம், "நான் எப்படி இங்கு அமரமுடியும்?" என்று அப்பெண் கத்தினார். பணிப்பெண் காரணம் கேட்டபோது, அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு கறுப்பின மனிதரைச் சுட்டிக்காட்டி, "அருவருக்கத்தக்க இந்த ஜென்மத்தின் அருகில் நான் எப்படி அமரமுடியும்?" என்று தன் வெறுப்பை உமிழ்ந்தார்.
பணிப்பெண் அவரிடம், "அம்மையாரே, இன்று விமானம் முற்றிலும் நிறைந்துள்ளது. காலியிடம் ஏதுமில்லை. கொஞ்ச நேரம் பொறுத்துக்கொள்ளுங்கள். விமானம் கிளம்பியதும், நான் 'கேப்டனி'டம் பேசி, மாற்று ஏற்பாடுகள் செய்கிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றார். அந்த வெள்ளை இனப்பெண், அனைவருக்கும் கேட்குமாறு, கறுப்பின மக்களைக் குறித்து இழிவாகப் பேசியபடி அமர்ந்திருந்தார். அருகில், கறுப்பின மனிதரோ எவ்விதச் சலனமும் இன்றி அமர்ந்திருந்தார்.
விமானம் கிளம்பி அரைமணி நேரம் சென்றது. வெள்ளை இனப்பெண்ணின் கோபம் கூடியது. சூழ இருந்த அனைவரிடமும் புகார்களைக் கொட்டித் தீர்த்தார். அந்நேரம் அப்பணிப்பெண் அவரிடம் வந்தார். "அம்மையாரே, நான் சொன்னதுபோல், இன்று விமானத்தில் அதிகக் கூட்டம். 'Economy' வகுப்பிலும், 'Business' வகுப்பிலும் ஓர் இடமும் காலியில்லை. முதல் வகுப்பில் மட்டும் ஒரே ஓர் இடம் உள்ளது" என்று கூறி சிறிது நிறுத்தினார். இதைக் கேட்டதும், அப்பெண்மணியின் முகம் மலர்ந்தது. சுற்றியிருந்தவர்களைப் பெருமையுடன் பார்வையிட்டார்.
அப்போது, பணிப்பெண் தொடர்ந்தார்: "இவ்வளவு அருவருக்கத்தக்க ஒரு மனிதப் பிறவிக்குப் பக்கத்தில் மற்றொருவர் அமர்ந்திருப்பது நல்லதல்ல என்று 'கேப்டன்' முடிவெடுத்துள்ளார். எனவே... " என்று பணிப்பெண் கூறியதும், வெள்ளை இனப்பெண் தன் கைப்பையை எடுத்துக்கொண்டு எழுந்தார். பணிப்பெண்ணோ அந்தக் கறுப்பின மனிதரை நோக்கி, "எனவே, சார், நீங்கள் தயவுசெய்து என்னுடன் வாருங்கள். நாம் முதல் வகுப்பிற்குச் செல்வோம்" என்று கூறினார். இதைக் கேட்டு, விமானத்தில் இருந்த அனைவரும் பலமாகக் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
தங்களைப் பற்றி தாங்களே மிக உயர்ந்த எண்ணங்கள் கொண்டு கற்பனை உலகில் மிதந்துவரும் சிலரை, உண்மை நிலைக்குக் கொண்டுவருவதற்கு, அவர்களை மீண்டும் கட்டாந்தரையில் இறக்குவதற்கு அதிர்ச்சி வைத்தியங்கள் தேவைப்படும். இந்த அதிர்ச்சி வைத்தியமே அந்த வெள்ளை இனப் பெண்மணிக்கு அன்று கிடைத்தது.

இத்தகைய அதிர்ச்சி வைத்தியத்தை, பரிசேயர் தலைவர் வீட்டில் கூடியிருந்த பரிசேயர்களுக்கு, 'பெரிய விருந்து உவமை' வழியே இயேசு கொடுத்தார். யூதர்களாக, அதிலும் குறிப்பாக, பரிசேயர்களாக தாங்கள் பிறந்துவிட்டோம் என்ற ஒரே காரணத்திற்காக, இறையாட்சி விருந்தில் தங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் என்ற இறுமாப்பில் பேசிய ஒரு பரிசேயருக்கு, உண்மையை உறைக்கும்படி சொல்ல 'பெரிய விருந்து உவமை'யை இயேசு கூறினார். மனிதராக வாழ அழைக்கப்பட்டவர்களில் ஒரு சிலர் அந்த அழைப்பை ஏற்க மறுத்தாலோ, அல்லது அவ்வழைப்பைத் தவறாகப் பயன்படுத்தினாலோ அவர்களுக்கு நிகழ்வதை, அல்லது, நிகழாமல் போவதைக் கூறும் ஓர் அழகிய உவமை... பெரிய விருந்து உவமை.

"ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைத்தார்." (லூக்கா 14: 16) என்று இயேசு இவ்வுவமையைத் துவக்கினார். இந்த வரியில், 'பெரிய விருநது', 'பலருக்கு அழைப்பு' என்று இரு எண்ணங்கள் நம் கவனத்தை முதலில் ஈர்க்கின்றன. இஸ்ரயேல் மக்கள் மத்தியில் 'பெரிய விருந்து' என்பது ஒருவேளை தரப்படும் விருந்து அல்ல, அது, ஒரு சில நாள்கள் நீடிக்கும் விருந்து. அவ்வகை விருந்தொன்றை ஏற்பாடு செய்த ஒருவர், 'பலரையும்' அழைத்திருந்தார் என்பதை, ஊர்மக்கள் அனைவரையும் அழைத்திருந்தார் என்றும் பொருள் கொள்ளலாம். இன்றும் இத்தகைய விருந்துகள் பல கலாச்சாரங்களில் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

ஊரில் முக்கியமானவர் ஒருவர் விருந்தளிக்கிறார், அந்த விருந்துக்குத் தாங்கள் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணரும் பலரும் அந்த விருந்து நாளை தங்கள் நினைவில் ஆழமாகப் பதித்துக் கொள்வர், இக்காலத்தில் நாம் கைப்பேசியிலோ, நாள் குறிப்பேட்டிலோ குறித்துக் கொள்வதைப்போல. அந்த நாள் வந்ததும், மறு அழைப்புக்குக் காத்திராமல், விருந்தில் கலந்துகொள்ளச் செல்வர்.
இந்த உவமையிலோ, இரண்டாவது அழைப்பும் சென்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மிக முக்கியமான, தவிர்க்கமுடியாத இறுதி நேரக் காரணங்கள் இன்றி, இந்த வாய்ப்பைத் தவறவிடமாட்டார்கள். எதிர்பாராத ஒரு விபத்தோ, ஆபத்தோ நிகழ்ந்தால், இந்த விருந்தில் கலந்துகொள்ள முடியாமல் போகலாம். மற்றபடி, அழைக்கப்பட்டவர்கள் விருந்தில் கலந்துகொள்வது உறுதி.
ஆனால், இயேசு கூறும் உவமையில், அழைக்கப்பட்டவர்கள், விருந்தைத் தவற விடுகின்றனர், தவறும் செய்கின்றனர். அவர்கள் இவ்விதம் நடந்துகொள்வது வினோதமாக, வேடிக்கையாக உள்ளது. மற்றொரு கோணத்தில் சிந்தித்தால், இது விபரீதமாகவும் தெரிகிறது. அழைக்கப்பட்டவர்கள் நடந்துகொண்ட விதத்தை இயேசு இவ்விதம் விவரிக்கிறார்:
லூக்கா நற்செய்தி 14: 17-20
விருந்து நேரம் வரவே அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி, 'வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகி விட்டது' என்று சொன்னார். அவர்கள் எல்லாரும் ஒருவர்பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர். முதலில் ஒருவர், 'வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன்; அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றார். 'நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்; அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றார் வேறொருவர். 'எனக்கு இப்போது தான் திருமணம் ஆயிற்று; ஆகையால் என்னால் வர முடியாது' என்றார் மற்றொருவர்.
அழைக்கப்பட்டவர்கள் சொன்ன காரணங்களை, இயேசு 'சாக்குப்போக்கு' என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். இந்த வார்த்தைக்கு அகராதியில் அர்த்தம் தேடினால், வலுவற்ற காரணம், பொய்க்காரணம், தட்டிக்கழிப்பு, நொண்டிச்சாக்கு என்று பல அர்த்தங்களைக் காணலாம். உவமையில் கூறப்பட்டுள்ள சாக்குப்போக்குகளை அலசும்போது, அவற்றில் தொனிக்கும் அலட்சியம், நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது.

முதல் இரு சாக்குப்போக்குகள், வயலையும், ஏர் மாடுகளையும் காரணம் காட்டுகின்றன. ஒருவர், வயலையோ ஏர் மாடுகளையோ வாங்குவதாக இருந்தால், முன்னரே அவற்றை நன்கு ஆய்வு செய்துதான் வாங்குவது வழக்கம். அவற்றை வாங்கியபின் ஆய்வு செய்வது அபூர்வம், அல்லது, அபத்தம். இன்றையக் காலக்கட்டத்துடன் இணைத்துச் சிந்தித்தால், "நான் ஒரு 'டிராக்டர்' வாங்கியிருக்கிறேன். அதை ஒட்டிப்பார்க்கப் போகிறேன்" என்று ஒருவர் சொல்வது ஆச்சரியம் தரும். பொதுவாக, 'டிராக்டரை' ஒட்டிப்பார்த்தபின்னர் வாங்குவதுதானே நடைமுறை?
அப்படியே, வயலையோ, ஏர் மாட்டையோ அவசரமாக வாங்கியிருந்தாலும், அவற்றை ஆய்வு செய்யவேண்டிய கட்டாயத்தை, விருந்துக்குப் பிறகு, அடுத்தநாளோ, அதற்கடுத்த நாளோ செய்யலாமே. வயலோ, ஏர் மாடுகளோ எங்கும் செல்லப் போவதில்லையே! எனவே, இவ்விரு சாக்குப்போக்குகளும் மிகவும் வலுவற்றைவையாகத் தெரிகின்றன.

மூன்றாவது ஆள் சொல்லும் காரணமும் வலுவற்றதாகத் தெரிகிறது. பொதுவாக, திருமணம் முடித்தவர்கள், பெண்ணையும் அழைத்துக்கொண்டு, பல்வேறு இல்லங்களில் விருந்துக்குச் செல்வதே அவர்களின் முதல் கடமையாக இருக்கும். அதுவும், ஊரில் நடைபெறும் ஒரு பொது விருந்திற்கு மனைவியை அழைத்துச் சென்றால், மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வது எளிதாகிவிடும். எனவே, திருமணத்தைக் காரணம் காட்டி, விருந்தைத் தட்டிக்கழித்தது மீண்டும் வலுவற்றதாகத் தெரிகிறது. மற்றொரு கோணத்தில் பார்க்கும்போது, இம்மூன்று காரணங்களிலும், அழைத்தவரை அலட்சியம் செய்யும் ஆணவமும் தெரிகிறது. அழைக்கப்பட்டவர்கள் காட்டிய இந்த அலட்சியமும், பகைமை உணர்வும் விபரீதமாக மாறின என்பதை, மத்தேயு நற்செய்தி 22ம் பிரிவில், அரசன் தரும் விருந்தாக சித்திரித்திருக்கும் உவமையில் காண்கிறோம்.

விருந்துக்கு வந்த அழைப்பைத் தட்டிக்கழிக்க, சாக்குப்போக்கு சொன்னவர்களைக் கண்டு, சிரிக்கவோ, கோபமடையவோ, பரிதாபப்படவோ நாம் ஆரம்பித்திருந்தால், கொஞ்சம் நிதானிப்போம். நாம் எத்தனை முறை, எத்தனை வழிகளில் அழைப்புக்களை ஏற்க மறுத்துள்ளோம் என்பதை ஆய்வு செய்யலாம். நமக்கு இறைவன் பல வழிகளில் விடுக்கும் அழைப்பைக் குறித்து சிந்திக்க தவக்காலம் ஓர் அருமையான காலம்.

இறுதியாக, அன்புள்ளங்களே, மார்ச் 13, வருகிற வியாழனைப் பற்றி ஒரு சிந்தனை. கடந்த ஆண்டு, மார்ச் 13ம் தேதி, மாலை, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகம் பல்லாயிரக் கணக்கான மக்களால் நிறைந்திருந்தது. மாலை 8 மணியளவில், பசிலிக்காவின் மேல் மாடத்தில் எளிமையான வெள்ளை உடையணிந்து, ஒருவர் தோன்றினார். உலகின் பல நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு அறிமுகம் இல்லாத கர்தினால் ஹோர்கெ மாரியோ பெர்கோலியோ அவர்கள், மக்கள் முன் திருத்தந்தை பிரான்சிஸ் என்று அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்.
திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இறைவன் அழைத்தபோது, அவர் அந்த அழைப்பை முழுமனதுடன் ஏற்றார். கடந்த ஓராண்டளவாய் நம் ஒவ்வொருவருக்கும் பல்வேறு அழைப்புக்களை விடுத்துவருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். நாடு, மொழி, இனம், மதம் என்ற பல எல்லைகளையும் தாண்டி, உலக மக்களைப் பெருமளவில் கவர்ந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று தன் தலைமைப் பணியின் முதலாம் ஆண்டை நிறைவு செய்கிறார். அவர் இன்னும் பல ஆண்டுகள், நல்ல உடல் நலத்துடன், திருஅவையின் தலைவராகப் பணியாற்றும் சக்தியை அவருக்கு வழங்க இறைவனிடம் சிறப்பாக மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.