2014-03-11 14:29:18

ஜப்பானில் சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தொடர்ந்த ஆதரவு தேவை


மார்ச்,11,2014. ஜப்பானில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தொடர்ந்த ஆதரவும் செபமும் தேவைப்படுகின்றன என்று அந்நாட்டு காரித்தாஸ் நிறுவனத் தலைவர் ஆயர் Isao Kikuchi கூறியுள்ளார்.
2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி ஜப்பானின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கிய பேரலை சுனாமி மற்றும் கடும் நிலநடுக்கத்தின் மூன்றாம் ஆண்டு நினைவாக செய்தி வெளியிட்டுள்ள ஆயர் Kikuchi, இப்பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் தங்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்றி இன்றும் வாழ்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
மனச்சோர்விலும் இழப்பிலும் பலர் வாழ்வதாகக் கூறும் ஆயர் Kikuchi, இம்மக்களுக்கு உதவி செய்துள்ள அனைவருக்கும் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
பொருளாதார சக்தியும், தொழில்நுட்ப வளர்ச்சியையும் கொண்டுள்ள ஜப்பானில் இம்மக்களுக்கு மறுவாழ்வு வழங்குவதற்கு மூன்று ஆண்டுகள் போதுமானவை, ஆனால் நிவாரணப் பணிகள் இன்னும் முழுமையாக இடம்பெறவில்லையெனவும் ஆயரின் செய்தி கூறுகிறது.
Fukushima அணுஉலையிலிருந்து வெளியேறிய அணுக்கதிர்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எவ்வளவு என இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.