2014-03-11 14:29:42

ஊழலற்ற அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக்குமாறு இந்தோனேசிய ஆயர்கள் வலியுறுத்தல்


மார்ச்,11,2014. இந்தோனேசியாவின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கு 2014ம் ஆண்டு முக்கிய ஆண்டாக இருப்பதால், இவ்வாண்டில் நடக்கவிருக்கும் இரு தேர்தல்களில் ஊழல் இல்லாத அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தியுள்ளது தலத்திருஅவை.
இவ்வாண்டு ஏப்ரல் 9ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலும், ஜூலை 9ம் தேதி அரசுத்தலைவர் தேர்தலும் இடம்பெறவிருப்பதை முன்னிட்டு, மக்களுக்கு விழிப்புணர்வை வழங்கும் அரசியல் அறிவியல் பயிற்சிகளை ஊக்குவித்து, அவற்றைத் தொடர்ந்து நடத்தியும் வருகின்றது அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருஅவை.
அந்நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடிகள், ஊழல் போன்றவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வுக் கல்வியை வழங்கி வருவதோடு, அந்நாட்டில் கிடைக்கும் இயற்கை வளங்கள் மற்றும் அவற்றின் மதிப்புகள் குறித்து விளக்கி வருகிறது தலத்திருஅவை.
சுன்னிப் பிரிவு முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள இந்தோனேசியாவில் கிறிஸ்தவர்கள் 5.7 விழுக்காடு. இவர்களில் கத்தோலிக்கர் 3 விழுக்காடு. மேலும், இந்துக்கள் 1.8 விழுக்காடு, பிற மதத்தினர் 3.4 விழுக்காடு.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.