2014-03-08 15:28:44

மலேசிய விமானம் விபத்து: வியட்நாம் கடல் பகுதியில் விமானம் கண்டுபிடிப்பு


மார்ச்,08,2014. 239 பேருடன் காணாமல்போன மலேசிய விமானம், வியட்நாமின் தோ சு(Tho Chu) தீவுகளில் இருந்து 153 மைல் தொலைவில் கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு அரசு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
இத்தகவலை வியட்நாம் கடற்படை அதிகாரி ஒருவர் அரசு செய்தி ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், வியட்நாம் கடற்படை கப்பல்கள் அப்பகுதியில் இல்லாததால், அருகில் உள்ள தீவுகளில் இருந்து மீட்பு பணிகளுக்காக படகுகளை கொண்டு வர உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மலேசிய ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான போயிங் 777-200 ரகத்தைச் சேர்ந்த எம்.எச்.370 விமானம் இச்சனிக்கிழமை காலை காணாமல் போனது. விமானத்தில் 12 பணியாளர்கள், 2 குழந்தைகள் உள்பட 239 பேர் இருந்தனர்.
விமானம் காணாமல் போனது குறித்து மலேசிய ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், "எம்.எச்.370 விமானம் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 12.41 மணிக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. காலை 6.30 மணிக்கு பெய்ஜிங் விமான நிலையத்திற்கு விமானம் சென்றிருக்க வேண்டும். ஆனால் அதிகாலை 2.40 மணியளவில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகியுள்ளது. விமானத்தைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தில் 5 இந்தியர்கள், சீனாவைச் சேர்ந்த 152 பேர், மலேசியாவைச் சேர்ந்த 38 பயணிகள், இந்தோனேசியாவைச் சேர்ந்த 7 பயணிகள், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 6 பயணிகள், பிரான்ஸ், அமெரிக்காவைச் சேர்ந்த 3 பயணிகள், நியூசிலாந்து, உக்ரைன், கனடா நாடுகளிலிருந்து தலா ஒரு பயணி என விமானத்தில் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆசியாவின் மிகப் பெரும் விமான நிறுவனங்களில் ஒன்று. இந்தா நிறுவனம் தினசரி ஏறக்குறைய 37,000 பயணிகளை உலகெங்கும் உள்ள சுமார் 80 இடங்களுக்கு ஏற்றிச் செல்கிறது.

ஆதாரம் : தி இந்து







All the contents on this site are copyrighted ©.