2014-03-07 15:34:29

வத்திக்கானில் அனைத்துலக பெண்கள் தினம்


மார்ச்,07,2014. தன்னலமற்ற மற்றும் துணிச்சலான பணிகளைத் திருஅவைக்குச் செய்துவரும் குரலற்ற பெண்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, வத்திக்கானும் மார்ச் 08, இச்சனிக்கிழமையன்று அனைத்துலக பெண்கள் தினத்தைச் சிறப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
விசுவாசத்தின் குரல்கள் என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படவிருக்கும் இந்த உலக தினம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, Fidel Götz கத்தோலிக்க நிறுவனத்தின் இயக்குனர் Chantal Gotz, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு இந்த எண்ணமும் உருவானது என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையில் பெண்களின் செயல்களுக்குக் கதவுகளைத் திறந்துவிடுமாறு கூறிவருவதைச் சுட்டிக்காட்டிப் பேசிய Chantal Gotz, திருஅவைக்குள் பெண்களின் பங்கு விரிவாக்கப்பட வேண்டும் என்ற அவரது ஆவல், தங்கள் நிறுவனத்தின் இலக்குகளோடு ஒத்திணங்கிச் செல்கின்றது என்றும் தெரிவித்தார்.
உலகில் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதியன்று அனைத்துலக பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.