2014-03-07 15:35:02

புவியின் வெப்பநிலை அதிகரிப்பு மலேரியா நோய் மேலும் பரவக் காரணமாகியுள்ளது


மார்ச்,07,2014. உலகில் அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக, மலேரியா நோயும் அதிக அளவில் பரவும் ஆபத்து தெரிகின்றது என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆப்ரிக்காவின் மலைப் பகுதிகளிலும் தென் அமெரிக்காவிலும் வெப்பம் மிகுந்த ஆண்டுகளில் மலேரியா நோய்த் தாக்குதல் அதிகரித்திருந்தது என, பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்
இப்புவியின் வெப்ப அளவு, எதிர்காலத்தில் சிறிய அளவில் அதிகரித்தாலே, மேலும் பல இலட்சம் பேருக்கு மலேரியா நோய் வரக்கூடிய அபாயம் ஏற்படும் என Science அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
பூமியின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, மலேரியா கிருமிகள் உற்பத்தியாகக் காரணமான கொசுக்கள் உயரமான பகுதிகளுக்கு தமது வாழ்விடத்தை மாற்றிக்கொள்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மலைப்பாங்கான இடங்களில் வாழ்பவர்களுக்கு மலேரியா நோய்க்குரிய எதிர்ப்பு சக்தி உடலில் இருக்காது என்பதால், அவர்களிடையே மலேரியா நோய் வேகமாகப் பரவும் என்று அஞ்சப்படுகிறது.
தற்போது உலகில் ஏறக்குறைய 22 கோடி பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.