2014-03-07 15:33:51

நம் ஆண்டவர் விரும்பிய ஒன்றிப்புக்கான அழைப்பை கிறிஸ்தவர்கள் புறக்கணித்தால் ஆண்டவரைப் புறக்கணிக்கும் ஆபத்துக்குத் தள்ளப்படுகிறோம், திருத்தந்தை பிரான்சிஸ்


மார்ச்,07,2014. கிறிஸ்தவர்களிடையே காணப்படும் பிளவுகள் உலகில் நற்செய்தி அறிவிப்புக்குப் பெரும் தடைகளாக உள்ளன என்ற உணர்வை அனைத்துக் கிறிஸ்தவர்களிடமும் ஏற்படுத்துவதற்கு உலக கிறிஸ்தவ சபைகளின் மாமன்றம் நற்பணியாற்றி வருகிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலக கிறிஸ்தவ சபைகளின் மாமன்றத்தின் 9 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு இம்மான்றம் ஆற்றிவரும் பணிகளையும் பாராட்டினார்.
நம் ஆண்டவர் விரும்பிய ஒன்றிப்புக்கான அழைப்பை கிறிஸ்தவர்கள் புறக்கணித்தால் நம் ஆண்டவரையும், அவரது உடலாம் திருஅவை வழியாக வழங்கும் மீட்பையும் புறக்கணிக்கும் ஆபத்துக்குத் தள்ளப்படுகிறோம் எனவும் கூறினார் திருத்தந்தை.
கிறிஸ்தவர்களிடையே காணக்கூடிய வகையிலும், முழுமையாகவும் ஒன்றிப்பு ஏற்படுவதற்கான பாதை இன்றும் கடும் போராட்டத்தில் உள்ளது என்றும், ஒன்றிப்புக்கான நமது பயணத்துக்கு இடைவிடாமல் தூய ஆவியிடம் செபிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.