2014-03-07 15:33:58

காயமடைந்த மனிதரைக் குனிந்து கட்டித்தழுவுவது மிகக் கடினமான நோன்பாகும், திருத்தந்தை பிரான்சிஸ்


மார்ச்,07,2014. காயமடைந்த மனிதரைக் குனிந்து கட்டித்தழுவுவது மிகக் கடினமான நோன்பாகும் மற்றும் மிகக் கடினமான பிறரன்புச் செயலாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளி காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார்
துன்புறும் அல்லது காயமடைந்துள்ள நம் சகோதர சகோதரிகளின் சதையைத் தொடுவதற்கு நாம் வெட்கப்படுகிறோமா என்ற கேள்வியை இத்திருப்பலி மறையுரையில் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ், நமது விசுவாச வாழ்வு, பிறரன்பு வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது என்றும், இதனை நடைமுறைப்படுத்தாத கிறிஸ்தவர்கள் வெளிவேடக்காரர்கள் என்றும் கூறினார்.
ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்வில் பிறரன்பின் முக்கிய பங்கு குறித்த சிந்தனைகளை இவ்வெள்ளிக்கிழமை மறையுரையில் வழங்கிய திருத்தந்தை, இதயத்தில் எவ்விதப் பிறரன்பு உணர்வும் இன்றி வெளியில் நன்றாகத் தோற்றமளிக்கும் மக்கள் கூட்டமல்ல கிறிஸ்தவம் என்றும் கூறினார்.
துன்புறுவோர் அனைவர் முன்னிலையிலும், எவ்வித வேறுபாடும், எவ்வித வெட்கமுமின்றி குனிந்து செயல்பட்ட இயேசுவின் உடலை வெளிப்படுத்துவதே கிறிஸ்தவம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், காயமடைந்த மனிதருக்குக் குனிந்து உசவி செய்த நல்ல சமாரியர் போன்ற நன்மைத்தனத்தின் தியாகமே மிகக் கடினமான நோன்பு மற்றும் மிகக் கடினமான பிறரன்புச் செயல் என்று கூறினார்.
நான் தர்மம் கொடுக்கும்போது, காசு போடும்போது ஏழையின் அல்லது தர்மம் எடுப்பவரின் கரத்தைத் தொடாமல் இருக்கின்றேனா, ஒருவர் நோயாய் இருப்பதை அறிந்து அவரைச் சந்திக்கச் செல்கின்றேனா போன்ற கேள்விகளை எழுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ், நம் சகோதர சகோதரிகளிடம் எவ்விதம் நடந்துகொள்கிறோமோ அதை வைத்தே நாம் நீதித்தீர்ப்பிடப்படுவோம் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.