2014-03-07 15:34:36

எரிட்ரியாவின் மனிதாபிமான நெருக்கடிகள்


மார்ச்,07,2014. பலவகையான மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்நோக்கிவரும் எரிட்ரியா மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கு, அனைத்துலக சமுதாயம் முயற்சி செய்ய வேண்டுமென்று, எரிட்ரியா குறித்து வத்திக்கான் வானொலியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் வலியுறுத்தப்பட்டது.
“எரிட்ரியாவிலிருந்து ஐரோப்பா : அவசர மனிதாபிமான உதவிகள்” என்ற தலைப்பில் அனைத்துலக குடியேற்றதாரர் நிறுவனம் இவ்வியாழனன்று நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய அருள்பணி Mussie Zerai, எரிட்ரியாவின் 56 இலட்சம் மக்களில் 2 இலட்சத்துக்கு மேற்பட்டோர், 2004ம் ஆண்டிலிருந்து நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என்று அறிவித்தார்.
கிழக்கு சூடானின் எல்லையிலுள்ள அகதிகள் முகாம்களுக்கும் இஸ்ரேலுக்கும் சென்றுகொண்டிருந்த மக்கள் தற்போது மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவுக்கும் செல்கின்றனர், இந்தக் கடினமான கடல் பயணத்தில் பலர் உயிரிழக்கின்றனர் என்றும் அக்குரு கூறினார்.
எரிட்ரியாவைவிட்டு மக்கள் வெளியேறும்போது பலநேரங்களில் மனித வியாபாரிகளால் கடத்தப்படுகின்றனர் என்றும், இவர்கள், ஓர் ஆளுக்கு நாற்பதாயிரம் டாலர்வரை பிணையல்தொகையாகக் கேட்கின்றனர் என்றும் அருள்பணி Zerai தெரிவித்தார்.
அருள்பணி Mussie Zerai, ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான Habeshia நிறுவனத் தலைவராவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.