2014-03-06 15:59:15

திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவும் சிலுவையும் இன்றி கிறிஸ்தவ வாழ்வுமுறை இல்லை


மார்ச்,06,2014. மனத்தாழ்மை, கருணை, தாராள மனப்பான்மை ஆகிய நற்பண்புகளே கிறிஸ்தவ வாழ்வுமுறையாகும், இயேசு செய்ததுபோல, இது, சிலுவையின் பாதை வழியே பயணம் செய்கின்றது, இந்தப் பாதை மகிழ்ச்சிக்கு இட்டுச்செல்கின்றது என இவ்வியாழனன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, இந்தச் சிலுவையின் பாதையை இயேசு முதலில் நடைமுறைப்படுத்தியதால், இப்பாதை கிறிஸ்தவ வாழ்வுமுறையாக உள்ளது என்றும் கூறினார்.
“என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” (லூக்.9,23) என இயேசு தம் சீடர்களுக்குக் கூறிய இந்நாளைய நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவர்களாகிய நாம், இந்தப் பாதைக்கு வெளியே வேறு பாதையை சிந்தித்துப் பார்க்க முடியாது என்றும் கூறினார்.
கடவுளுக்கு இணையான இயேசு தம்மையே வெறுமையாக்கி, நம் அனைவருக்காகவும் ஊழியரானார் என்றுரைத்த திருத்தந்தை, இயேசுவின் இந்த வாழ்வுமுறை நம்மைக் காப்பாற்றும், நமக்கு மகிழ்ச்சியை வழங்கும், ஏனெனில் தன்னையே இழப்பது, இந்த உலகப் பொருள்கள் எல்லாம் எனக்காக என்ற தன்னலப் பாதைக்கு எதிரானதாகும் என்றும் கூறினார்.
இந்தப் பாதை மற்றவர்களுக்கும் திறக்கப்பட்டுள்ளது என்றும், இயேசுவின் வாழ்வுமுறையைப் பின்செல்லுதல் மகிழ்வின் ஊற்று என்றும், ஒருவர் தனது வாழ்வை மற்றவருக்கு வழங்குதல் தாராள மனப்பான்மை உணர்வால் வருவது என்றும், இயேசுவோடு செல்லுதலே நம் மகிழ்வு என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.