2014-03-06 16:03:41

சிறையிலிருந்து விடுதலைபெற்று, சமுதாயத்தில் இணையும் 6,50,000க்கும் அதிகமான பேருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய அமெரிக்க ஆயர்கள் விண்ணப்பம்


மார்ச்,06,2014. ஒவ்வோர் ஆண்டும் சிறையிலிருந்து விடுதலைபெற்று, மீண்டும் சமுதாயத்தில் இணையும் 6,50,000க்கும் அதிகமான பேருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய, அமெரிக்க அரசு தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கைதிகளின் மறுவாழ்வு குறித்த சட்டவரைவு ஒன்று, "இரண்டாவது வாய்ப்புச் சட்டம்" (Second Chance Act) என்ற பெயரில் அமெரிக்க பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சட்ட வரைவுக்கு ஆதரவாக, அமெரிக்க ஆயர் பேரவையின் உள்நாட்டு நீதி மற்றும் மனித முன்னேற்றப் பணிக்குழு, பாராளு மன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மறுவாழ்வு முயற்சிகள் இன்னும் தெளிவாகத் திட்டமிடப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சிறையிலிருந்து திரும்பும் மனிதர்களுக்கு, சரியான உறைவிடம், நிலையான வேலை என்ற உதவிகள் தரப்படவில்லையெனில், அவர்கள் மீண்டும் தவறுகள் செய்யவும், வன்முறைகளில் ஈடுபடவும் நாமே வாய்ப்புக்களை உருவாக்குகிறோம் என்று, அமெரிக்க ஆயர்கள் சார்பில் பேசிய மையாமி பேராயர் Thomas Wenski அவர்கள் கூறினார்.
"இரண்டாவது வாய்ப்புச் சட்ட"வரைவு, நடைமுறைக்கு ஏற்ற பல திட்டங்களை முன்வைப்பதால், இச்சட்டம் பாராளுமன்றத்தினர் அனைவரின் ஆதரவையும் பெறவேண்டும் என்று அமெரிக்க ஆயர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.