2014-03-05 16:02:03

திருத்தந்தையின் பேட்டி - நான் ஒரு 'சூப்பர்மேன்' அல்ல


மார்ச்,05,2014. நான் ஒரு சராசரி மனிதன், மக்களோடு அதிகமான நேரத்தைச் செலவிட விழையும் மனிதனே தவிர நான் ஒரு 'சூப்பர்மேன்' அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரான்சிஸ் அவர்கள், Corriere della Sera என்ற இத்தாலிய நாளிதழுக்கு அளித்துள்ள ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் தங்கியுள்ள சாந்தா மார்த்தா இல்லத்தில் Corriere della Seraவின் ஆசிரியர் Ferruccio De Bortoli அவர்களுடன் மேற்கொண்ட ஓர் உரையாடலின் தொகுப்பு இப்புதனன்று வெளியானது. இந்தப் பேட்டியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதல் ஆண்டு அனுபவத்தை பல கோணங்களிலிருந்து விவரித்துள்ளார்.
தனக்கு முன் பதவியைத் துறந்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைக் குறித்துப் பேசுகையில், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளைப் போல அவரைக் கருதுவது தவறு, மாறாக, அவர் ஆழ்ந்த சிந்தனைகள் உடைய ஒரு நிறுவனம் என்றும், தன்னை வழிநடத்தும் நிலையில் இருப்பவர் என்றும் கூறினார்.
பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளான குழந்தைகள் என்ற உண்மை, திருஅவையில் ஆழமான காயத்தை உருவாக்கியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இந்தப் பிரச்சனையில் திருஅவை, குறிப்பாக, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் போற்றுதற்குரியன என்று கூறினார்.
உலகின் அரசுகள், நிறுவனங்கள் அனைத்தையும்விட, வெளிப்படையான முறையில் இயங்கிவருவது கத்தோலிக்கத் திருஅவையே என்றாலும், இது மட்டுமே, பல திசைகளிலிருந்தும் தாக்குதல்களைச் சந்தித்து வருகிறது என்பதையும் திருத்தந்தை தன் பேட்டியில் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், திருஅவையில் பெண்களின் பங்கு, திருஅவையின் அடித்தளமான கோட்பாடுகள், புனித பூமியில் தான் மேமாதம் மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணம் என்ற பல கேள்விகளுக்கு, திருத்தந்தை இந்தப் பேட்டியில் விடை பகர்ந்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.