2014-03-05 15:26:37

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


மார்ச் 05,2014. இப்புதனன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட 'திருநீற்றுப்புதன்' குறித்தும், அதனோடுத் துவங்கியுள்ள தவக்காலம் குறித்தும் தன் இவ்வார புதன் மறைபோதகத்தில் உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்று திருநீற்றுப்புதன். இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பு எனும் மீட்பு மறையுண்மைகளை திருஅவை ஆண்டுதோறும் கொண்டாடுவதையொட்டிய தயாரிப்பாக, ஒறுத்தல், செபம் மற்றும் மனமாற்றத்தை உள்ளடக்கிய தவக்காலத் திருப்பயணத்தை நாம் இந்நாளில் துவக்குகின்றோம். பாஸ்கா மறையுண்மையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கடவுளின் அளவற்ற அன்பை மகிழ்வோடும் நன்றியுணர்வோடும் தியானிப்பதோடு, திருமுழுக்கில் நாம் பெற்ற புதுவாழ்வை முழுமையாக வாழவும் திருஅவை இந்நாட்களில் நமக்கு அழைப்புவிடுக்கிறது. இயேசுகிறிஸ்துவின் பாதச்சுவடுகளில் இடம்பெறும் இந்த ஆன்மீகப் புதுப்பித்தல் பயணமானது, இன்று நம்மிடையே காணப்படும் ஆன்மீக மற்றும் பொருளாதார வறுமை வளர்ந்து வருவதை உணரவும், அதற்கு பதிலுரைக்கவும் நமக்கு அழைப்புவிடுக்கிறது. கடவுளின்றிச் செயல்படமுடியும் என்ற எண்ணமுடைய கலாச்சாரத்தின், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் செபிக்கக் கற்றுத்தராத ஒரு கலாச்சாரத்தின், வன்முறைகளையும் ஏழ்மையையும், சமுதாய அழிவுகளையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் ஒரு கலாச்சாரத்தின், அழுத்தங்களை நாம் முற்றிலும் உணர்ந்தவர்களாக, அவைகளை எதிர்த்து நிற்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றோம். தனியார்களாகவும் சமுதாயமாகவும் நற்செய்தியின் வார்த்தைகளுக்குச் செவிமடுக்கவும், நம் விசுவாசத்தின் மறையுண்மைகளை ஆழ்ந்து தியானிக்கவும், ஒறுத்தல் மற்றும் பிறரன்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கவும், நம் இதயங்களை இறை அருளுக்கும் நம் சகோதர சகோதரிகளின் தேவைகளுக்கும் முழுமையாகத் திறக்கவும், இந்த தவக்காலம் நமக்கு உதவுவதாக.
இவ்வாறு, தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், அனைவரையும் வாழ்த்தி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.