2014-03-05 15:59:30

திருத்தந்தை - ஒற்றுமை உணர்வை வேரோடு அழிக்கும் சக்தி படைத்தது மனித வர்த்தகம்


மார்ச்,05,2014. கடந்த ஜூலை மாதம் தன்னை அன்புடன் வரவேற்ற பிரேசில் நாட்டு ஆயர்களுடன் இத்தவக் காலத்தில் மீண்டும் ஒருமுறை மனதால் இணைய விழைவதாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
மார்ச் 5, இப்புதனன்று துவங்கியுள்ள தவக்காலத்தையொட்டி, பிரேசில் ஆயர்கள் பேரவை துவக்கியுள்ள சகோதர கருத்துப் பரப்புதல் முயற்சிக்கென செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
கடந்த 50 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த முயற்சியின் 51வது ஆண்டு மையக் கருத்தாக, கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்: அதில் நிலைத்திருங்கள் (கலாத்தியர் 5:1) என்று திருத்தூதர் பவுல் கூறிய வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
'உடன்பிறப்பு உணர்வும், மனித வர்த்தகமும்' என்பதை இவ்வாண்டின் மைய முயற்சியாக பிரேசில் ஆயர்கள் தேர்ந்துள்ளதற்கு, திருத்தந்தை தன் பாராட்டைத் தெரிவித்துள்ளார்.
பிரேசில் மக்கள் ஒற்றுமை உணர்வில் வாழ்வது இவ்வுலகிற்கு ஓர் எடுத்துக்காட்டு என்று தன் பிரேசில் பயணத்தின் பொது கூறியதை மீண்டும் நினைவு கூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த ஒற்றுமை உணர்வை வேரோடு அழிக்கும் சக்தி படைத்தது மனித வர்த்தகம் என்று எடுத்துரைத்தார்.
மனித உறுப்புக்களுக்காகவும், பாலியல் வன்கொடுமைகளுக்காகவும், போதைப் பொருள் கடத்தலுக்காகவும் மனிதர்கள், குறிப்பாக, குழந்தைகளும், பெண்களும் பொருள்களைப் போல விற்கப்படுவது நாம் வாழும் இன்றைய சமுதாயத்தை ஆழ்ந்த ஆன்ம சோதனைக்கு அழைக்கிறது என்று திருத்தந்தை தன் செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
பிரேசில் நாட்டில் செயல்படும் Walk Free Foundation என்ற மனிதநேய அறக்கட்டளை ஒன்றின் கணிப்புப்படி, ஒவ்வோர் ஆண்டும், பிரேசில் நாட்டில் மட்டும் 2 இலட்சம் மக்கள் அடிமைகளாக விற்கப்படுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.