2014-03-04 15:36:08

திருத்தந்தை பிரான்சிஸ் : விவிலியத்தை வைத்திருப்பதற்காக கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்


மார்ச்,04,2014. திருஅவையின் தொடக்க காலங்களைவிட இக்காலத்தில் அதிகக் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்துக்காகக் கொலைசெய்யப்படுகின்றனர் என்று சொல்லி, கிறிஸ்தவர்களின் பாதையில் எப்பொழுதும் சிலுவை இருக்கின்றது என இச்செவ்வாயன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, நாம் வாழும் இக்காலத்தில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதை மையப்படுத்தி மறையுரையாற்றினார்.
இயேசுவைப் பின்பற்றுவதால் அவரது சீடர்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு என்ன என்பது குறித்து பேதுரு இயேசுவிடம் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்தபோது, தம்மைப் பின்செல்பவர்களுக்கு இன்னல்களும் எப்போதும் சேர்ந்தே வரும் என்று இயேசு உரைத்த பதிலைச் சுட்டிக்காட்டி மறையுறையாற்றிய திருத்தந்தை, இந்த உலகம் கிறிஸ்துவின் இறைத்தன்மையைச் சகித்துக்கொள்ளாததே கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதற்கு காரணம் எனவும் கூறினார்.
இன்று இயேசுவுக்குச் சாட்சி சொல்லும் பல சகோதர சகோதரிகள் அடக்குமுறைக்கு உள்ளாகின்றனர், சிலரால் விவிலியத்தைக் கொண்டுசெல்ல முடியாது எனவும், இவர்களால் ஒன்றுசேர்ந்து செபிக்க முடியாது எனவும் திருத்தந்தை கூறினார்.
திருப்பலிக்குச் செல்வது தடைசெய்யப்பட்டிருப்பதால் அதற்குச் செல்ல இயலாமல் இருக்கும் சகோதரர்களை நினைத்துப் பார்ப்போம், சிலுவையைச் சுமந்து சென்று இயேசு போல் துன்பம் அனுபவிக்க நாம் தயாரா என்ற கேள்வியையும் இச்செவ்வாய் மறையுரையில் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.