2014-03-04 15:36:52

இலங்கையின் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கு பன்னாட்டு விசாரணை குழு அவசியம், ஐ.நா.வில் தமிழ் அருள்பணியாளர்கள்


மார்ச்,04,2014. இலங்கையின் உள்நாட்டுப்போரின்போது இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு அளவில் விசாரணை நடத்தப்படுமாறு 200க்கும் மேற்பட்ட தமிழ் அருள்பணியாளர்கள் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் அவைக்கு இத்திங்களன்று கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
ஜெனீவாவில் இத்திங்களன்று தொடங்கியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 25வது கூட்டத்தில் 204 தமிழ் அருள்பணியாளர்களின் கையெழுத்துக்களைக் கொண்ட கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 2009ம் ஆண்டின் இறுதிக்கட்டப் போரில் ஏறக்குறைய 40 ஆயிரம் அப்பாவி குடிமக்கள் கொல்லப்பட்டனர் என ஐ.நா. கணக்கிட்டுள்ளது.
இதற்கிடையே, இலங்கையில் நடந்த இனப் படுகொலை குறித்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் அமெரிக்கா இச்செவ்வாயன்று தாக்கல் செய்துள்ளது.
ஜெனிவாவில் இத்திங்களன்று துவங்கிய ஐ.நா. மனித உரிமைக் குழுவிடம், அமெரிக்க தலைமையிலான 4 நாடுகள் கொண்ட குழு, இலங்கையில் தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், இனப்படுகொலை நடப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அந்த தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது.
மேலும், இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா மூன்றாவது முறையாக இந்தத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

ஆதாரம் : UCAN







All the contents on this site are copyrighted ©.