2014-03-03 16:33:26

வாரம் ஓர் அலசல் – காது கொடுத்துக் கேளுங்கள்


மார்ச்,03,2014. RealAudioMP3 ஒருநாள் ஒரு நாட்டின் அரசுத்தலைவருக்கு அந்நாட்டின் மனநல மருத்துவமனை ஒன்றிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. ஐயா, நமது நாட்டுப் பொதுத் தேர்தலுக்குமுன்னர் இந்த மருத்துவமனைக்கு ஒருமுறை வந்து பேசிவிட்டுப்போங்கள் என்று அந்த அழைப்புக் கடிதத்தில் இருந்தது. அந்த அரசுத்தலைவர் சற்று தயக்கம் காட்டினார். ஆனால் அவரது மனைவி அவரை அங்குச் செல்லுமாறு விடாப்பிடியாக வற்புறுத்தினார். ஒரு பிரச்சனையும் வராது. ஏன், கடந்த வாரம்கூட நீங்கள் அந்த ஒரு பகுதிக்குச் சென்று, உங்களுக்குத் தெரியாத, அப்பகுதி மக்கள் மொழியில் பேசினீர்கள். அந்த மக்களும் ஏதோ புரிந்துகொண்டதுபோல் கை தட்டி அசத்திவிட்டார்கள். நீங்களும் அதில் குளிர்ந்து போனீர்கள். அதுமாதிரி இங்கேயும் போய் எதையாவது பேசிவிட்டு வாருங்கள். நல்ல இயல்பாய் இருக்கிறவர்களுக்கே உங்கள் பேச்சு விளங்கவில்லை. இவர்களுக்கு என்ன விளங்கவா போகுது! என்று சொல்லி அரசுத்தலைவரின் மனைவி அவரை ஊக்கப்படுத்தினார். அரசுத்தலைவரும் அந்த மருத்துவமனைககுச் சென்றார். அப்போது அவர் பேச வேண்டிய அறைக்கு வெளியில் பத்து பதினைந்து மனநலம் குன்றிய நோயாளிகள் குனிந்து சுவரில் காதை வைத்துக்கொண்டு இருந்ததைப் பார்த்தார் அரசுத்தலைவர். அப்படி அவர்கள் எதைக் கேட்டுக்கொண்டுள்ளனர் என அவர்களில் ஒருவரிம் கேட்டார். அதற்கு அந்த ஆள், சத்தம் போடாதீர்கள், அறைக்குள் எங்கள் நாட்டு அரசுத்தலைவர் பேசிக் கொண்டிருக்கிறார். அதுதான் நாங்கள் எல்லாரும் வெளியில் நின்று அவரது பேச்சை ஒட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். விருப்பமானால் நீங்களும் ஒருதடவை சுவரில் காதை வைத்துக் கேட்டுப் பாருங்கள் என்று சொன்னார். என்னடா இது வேடிக்கையாக இருக்குது! நாம் இன்னும் பேசவே இல்லை. அதற்குள் எப்படி இந்த ஆள்களுக்கு எனது பேச்சு கேட்டிருக்கும் என்று நினைத்து, எதுக்கும் நாமும் ஒருதடவைக் கேட்டுப் பார்ப்போம் என்று தானும் சுவரில் காதை வைத்து உற்றுக் கேட்டார் அரசுத்தலைவர். “என்னப்பா இது எனக்கு ஒன்றுமே கேட்கவில்லையே என அரசுத்தலைவர் சொல்ல, அது சரி, “உமக்கு எப்படி கேட்கும்?. இங்கு ஒரு மணிநேரமா கால்வலிக்க நின்று கேட்கும் எங்களுக்கே எதுவும் கேட்கவில்லை. பத்து நிமிடத்துக்கு முன்னர் வந்த உமக்கு அது கேட்கவா போகுது?”என்றார் அந்த ஆள். அவ்விடத்தில் இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிலர், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பவர்களுக்கே பதில் சொல்லத் தெரியாத நம் தலைவர், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி பதில் சொல்வார் என முணுமுணுத்துக் கொண்டிருந்தனர்.
ஒரு தலைவரைக் கிண்டல் செய்வதுபோல் இது தெரிந்தாலும், சில நாடுகளின் அரசியல் தலைவர்கள் குடிமக்களின் புகார்களை எப்படிக் கவனமாய்க் கேட்டுச் செயல்படுகின்றார்கள் என்பதை இக்கதை சுட்டிக்காட்டுகின்றது. ஒரு நாட்டின் கடைக்கோடியில் வாழும் மக்களின் பிரச்சனைகளைக் காது கொடுத்துக் கேட்டு நிர்வாகம் செய்ய வேண்டியது நல்ல தலைவர்களின் கடமை என்று அண்மையில் ஓர் அரசியல் மேடையில் வலியுறுத்தப்பட்டது. “காது கொடுத்துக் கேளுங்கள்; நீங்கள் கடவுள் ஆகலாம். மனம் விட்டுப் பேசுங்கள்; காது கொடுத்துக் கேளுங்கள், அப்போது உங்கள் மன அழுத்தங்கள் மாயமாய் மறைந்துபோகும்” என்று ஒரு பெரியவர் சொன்னார். ஒருவருடைய பிரச்சனைகளைக் காது கொடுத்து கேட்பதாலேயே பெரும்பாலான தற்கொலைகளைத் தடுக்கமுடியும் என்று உளவியல் நிபுணர்கள் சொல்கின்றனர். உங்களிடம் யாரேனும் தங்கள் துன்ப துயரங்களைக் கொட்டும்போது, கவனமாகக் கேட்டிருந்தால் மதுக்கடைகளில் கூட்டம் குறைந்திருக்கும், மனக்கோளாறுகள் அதிகரித்திருக்காது என, பெரியவர்கள் அறிவுரை சொல்கிறார்கள். உண்மைதான். பெற்றோர் தங்களின் பிள்ளைகள் சொல்வதைக் கவனமாகக் கேட்டால், அவர்களுக்கு நேரிடும் பாலியல் தொல்லைகளைக்கூட தடுக்கலாம். பொதுவாக, நாம் ஏன் பிறர் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பதில்லை? ஏனெனில் நாம் பிறரைச் சந்திக்கும்போது நம்மையே முன்னிலைப்படுத்தி, நமது பெருமைகளையும், சாதனைகளையும் கூறி நம்மை முக்கியமானவராகக் காட்டுவதில் கவனம் செலுத்துவதுதான் இதற்குக் காரணம்.
பிறர் சொல்வதைக் கவனமாகக் கேட்டால் சமுதாயத்தில் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும். இந்நாள்களில் உக்ரைன் நாட்டில் பதட்டநிலைகள் அதிகரித்து வருகின்றன. இரஷ்யா, உக்ரைனின் Crimea தன்னாட்சிப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இரஷ்யா இந்த ஆக்ரமிப்பைத் தவிர்க்க வேண்டுமென மேற்கத்திய நாடுகள் விடுக்கும் வேண்டுகோளைப் புறக்கணித்து, ஆயிரக்கணக்கான படைவீரர்களால் அப்பகுதியை முற்றுகையிட்டுள்ளது இரஷ்யா. போர்தொடுப்பதற்குத் தயாராக, இரண்டு போர்க் கப்பல்களை உக்ரைன் பகுதிக்கு அனுப்பியுள்ளது இரஷ்யா. இந்நிலையில் கடந்த புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் உக்ரைனில் உரையாடல் மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென உருக்கமாகக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியிலும் மீண்டும் இதே விண்ணப்பத்தை முன்வைத்து அந்நாட்டுக்காகச் செபிக்கக் கேட்டுக்கொண்டார RealAudioMP3 ். வெனெசுவேலா, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, தென்சூடான், நைஜீரியா என, இரத்தும் சிந்தும் மோதல்கள் நடக்கும் இடங்களில் சண்டைகள் நிறுத்தப்பட்டு அமைதி திரும்பட்டும் என திருத்தந்தையும், உலகத் தலைவர்களும் தொடர்ந்து அழைப்புவிடுத்து வருகின்றனர். இந்தத் தொடர் அழைப்புக்கள் காது கொடுத்துக் கேட்கப்பட்டால், அப்பாவி உயிர்கள் பலியாவது நிறுத்தப்படும், அகதிகள் முகாம்கள் இல்லாமற்போகும், மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மாண்புடன் வாழ வழி அமைக்கப்படும். பிறர் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பது மிகவும் முக்கியம். அதற்காகவே இறைவன் நமக்கு ஒரு வாயையும், இரண்டு காதுகளையும் கொடுத்திருக்கிறார். ஐம்புலன்களில் ஒன்று செவிப்புலன். காது மனிதருக்கு மிகவும் முக்கியமான உறுப்பாகும். காதைக் ‘கண்’ போல பாதுகாப்பது நம் கடமை. ஆனால் இன்று உலகில் 36 கோடிப்பேர், அதாவது உலகின் மக்கள்தொகையில் 5.3 விழுக்காட்டினர் கேட்கும் திறனை இழந்துள்ளனர். காது கேளாமை பிரச்சனைக்கு ஆரம்பத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் குறைந்தது இவர்களில் பாதிப்பேரின் குறைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்று உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது. காதின் முக்கியவத்துவத்தையும், அதைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 3ம் தேதி அனைத்துலக காது பராமரிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. “காதைப் பராமரிப்பதன்மூலம் கேட்கும் திறன்இழப்பைத் தவிர்க்கலாம்” என்ற தலைப்புடன் இவ்வாண்டின் இந்த உலக நாள் இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்டது.
முழுமையாகவோ அல்லது பாதியாகவோ ஒலியை உணர அல்லது புரிந்துகொள்ள முடியாதவர்கள் காது கேளாதவர் எனப்படுகின்றனர். நமது காது சாதாரணமாக 20 ஹெர்ட்ஸ்ஸில் இருந்து 20 கிலோ ஹெர்ட்ஸ்வரை கேட்கும் திறன் கொண்டது. காதின் உள்ளே செல்லும் குழாயில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுரப்பிகள் உள்ளன. இவை சுரக்கும் மெழுகு போன்ற திரவம்தான் காதிற்குள் தூசி, அழுக்கு செல்லாமல் பாதுகாக்கிறது. காதின் நடுவில் மெல்லிய ஜவ்வு போன்ற தடுப்பு உள்ளது. இது செவிப்பறையாகும். இதுதான் காற்றில் வரும் ஒலி அதிர்வுகளை வாங்கி உள்ளே அனுப்புகிறது. நமது தாடை அசைவின்போது தானாகவே அழுக்குகளை வெளியேற்றும் திறன் காதுகளுக்கு உண்டு. அதனால் கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் காதில்விட்டுக் குடைந்து அழுக்குகளை நீக்க முயற்சி செய்யக் கூடாது. இப்படிச் செய்யும்போது அவை செவிப்பறையில் பட்டால், ஜவ்வில் ஓட்டை விழுந்து கிழிந்துவிட வாய்ப்புள்ளது. இது கேட்கும் திறனைப் பாதிக்கும். காதுக்குள் கிருமித்தொற்றும் ஏற்படும். அதிக சப்தத்தைக் கேட்பதால்கூட காது கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. பெற்றோருக்கு இக்குறைபாடு இருப்பின், குழந்தையையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அடிக்கடி சளி அல்லது தொண்டை வலி ஏற்பட்டாலும் காது கேட்காமல் போகலாம். குழந்தைகளுக்கு காது கேளாமை இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில் இது குழந்தையின் பேச்சுத்திறனையும் பாதிக்கும். கைபேசிகளின் கதிர்வீச்சு காரணமாகக்கூட கேட்கும் திறன் பாதிப்படைகிறது. காது ஒரு மெல்லிய உறுப்பு. எனவே இதை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
பலத்த சத்தம் ஏற்படும் இடங்களில் வேலை செய்வோர், ஒலித்தடுப்பு கருவிகளைப் பொருத்திக் கொண்டால், காது கேளாமையில் இருந்து தப்பிக்கலாம். காதில் ஒலிவாங்கியை மாட்டிக்கொண்டு சப்தமாகப் பாட்டுக் கேட்பதும்கூட கேட்கும் திறனைப் பாதிக்கும். தாயின் வயிற்றில் வளரும் சிசு, தாயின் குரலை அறிந்து கொள்கின்றது மற்றும் கருவிலேயே, வெளிப்புற சப்தங்களை உட்கிரகிக்கும் தன்மையும் சிசுவுக்கு இருக்கிறது என்பதை Johns Hopkins பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள். 36 வாரம் நிரம்பிய 74 கர்ப்பிணித் தாய்மாரிடம் ஒரு கதையை வாசிக்கச் சொல்லி, அச்சமயத்தில் சிசுவின் இதயத் துடிப்பு மற்றும் அசைவுகளை ஆராய்ந்ததில், தாய் சத்தமாக படிக்க ஆரம்பித்ததும், சிசு தனது அசைவுகளை நிறுத்திவிட்டு தாய் படிப்பதை கூர்ந்து கவனித்ததையும், அதன் இதய துடிப்புக்கூட அச்சமயத்தில் மெதுவாக இருந்ததையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் கர்ப்பிணித் தாய்மார் நல்ல செய்திகளைக் கேட்க வேண்டும், நல்ல செய்திகளையே பேச வேண்டும்.
வீடுகளிலும், மற்ற இடங்களிலும் ஒருவருக்கொருவர் தேவையில்லாமல் கத்திப் பேசுவதை நாம் குறைக்க வேண்டும். கத்திக் கத்திப் பேசுவதால் தொண்டை உலர்ந்துபோகும். தேவையில்லாமல் உடலின் சக்தி வீணாகும். இரத்த அழுத்தம் கூடும். தொலைக்காட்சியில் அளவுக்கதிகமாக சத்தம் வைத்துக் கேட்பது, அதிக வாகனப் போக்குவரத்து உள்ள சாலையில் இரைச்சல்களுக்கு இடையில் நின்று தேவையில்லாமல் காரில், பேருந்தில் ஒலி எழுப்புவது போன்ற இவையெல்லாமே தேவை இல்லாத இவையெல்லாமே சத்தம்தான். இவற்றைத் தவிர்ப்பதன் மூலமும் காதைப் பாதுகாக்கலாம். காது என்ற ஓர் உறுப்பு வேலை செய்யவில்லை யென்றால், நமக்கு கேட்கும் திறன் இல்லாமல் போகும். பின்னர் பிறர் பேசுவது, பிற ஒலிகளின் தன்மையை நம்மால் அறிய முடியாது. அத்துடன் பிறரது கேலிக்கும் கிண்டலுக்கும் நாம் ஆளாக வேண்டியிருக்கும். எனவே பிறரது நல்ல அறிவுரைகளைக் காது கொடுத்துக் கேட்போமா!








All the contents on this site are copyrighted ©.