2014-03-03 16:30:42

புனிதரும் மனிதரே : தந்தை சொல் தட்டாத தனயன்(புனித கசிமீர்)


1471ம் ஆண்டு மே மாதத்தில் போலந்து அரசர் 4ம் கசிமீரின் மூத்த மகன் 2ம் Vladislaus
பொகேமியாவின் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், பொகேமியாவின் கத்தோலிக்கப் பிரபுக்கள் குழு ஒன்று விலாடிஸ்லாவுக்குப் பதிலாக, மத்தியாஸ் கோர்வினுஸ் என்பவருக்கு ஆதரவளித்தது. இதற்கு எதிராக, ஹங்கேரி நாட்டு பிரபுக்கள் குழு ஒன்று மத்தியாஸ் கோர்வினுஸூக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டி, இவரது ஆட்சியைக் கவிழ்க்குமாறு போலந்து அரசருக்கு அழைப்பு விடுத்தது. போலந்து அரசர் 4ம் கசிமீர், தனது மூன்றாவது மகன் கசிமீரை ஹங்கேரியின் அரசராக்க விரும்பினார். இதனால் 12 ஆயிரம் வீரர்கள் கொண்ட ஓர் இராணுவத்தை தனது மகன் கசிமீர் தலைமையில் அனுப்பினார் அரசர் 4ம் கசிமீர். இந்தப் படையெடுப்புத் தவறானது என்பதில் இளவரசர் கசிமீர் உறுதியாக இருந்தாலும் தந்தை சொல்லுக்குப் பணிந்து படையெடுத்துச் சென்றார். ஆனால் அதற்குள் கோர்வினுஸ் அந்நாட்டில் தனக்கு எதிரானவர்களுடன் சமாதானம் செய்து 16,000 வீரர்களுடன் போலந்து படையை எதிர்த்தார். போலந்து இராணுவம் பின்வாங்கியது. இளவரசர் கசிமீர் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினாலும் தந்தைக்குப் பயந்தார். இவர்மீது கோபம் கொண்ட தந்தை, கசிமீர் தனது மனதை மாற்றி அரண்மனை வாழ்வில் ஈடுபாடு கொள்வார் என்ற நம்பிக்கையில் அரண்மனையிலேயே சிறைவைத்தார். திருமணத்துக்கும் ஏற்பாடு செய்தார். அரண்மனையில் ஆடம்பர வாழ்வுக்கான அனைத்து வசதிகளும் இருந்தும் அதில் விருப்பம் கொள்ளாமல் கடவுள் பற்றிய சிந்தனைகளே அந்த இளவரசரை சிறுவயதிலிருந்து ஆக்ரமித்திருந்தது. திருமணத்தில் விருப்பமில்லாத இளவரசர் கசிமீர் இறைவனின் உதவியை நாடினார். இறுதியில் தனது 23வது வயதில் 1484ம் ஆண்டில் நுரையீரல் நோயால் இறந்தார். 1461ம் ஆண்டில் பிறந்த இளவரசர் புனித கசிமீர், போலந்துக்கும் லித்துவேனியாவுக்கும் பாதுகாவலர். இவரது விழா மார்ச் 4.
தன்னைச் சுற்றியிருந்த செல்வங்கள் தனது வாழ்வுக்குச் சோதனைகளாகவே அவருக்குத் தெரிந்தன. இளவரசர் என்பதால், விலையுயர்ந்த, நாகரீகமான உடைகள் உடுத்தவேண்டியிருந்தது. ஆனால் இவர் சாதாரண உடைகளையே உடுத்தினார், சிறிது நேரமே தூங்கினார். இரவில் அதிக நேரம் செபித்தார். அதுவும் பஞ்சுமெத்தையில் உறங்காமல் தரையில் படுத்தார். இவரது இச்செயல்களைப் பார்த்து அரண்மனையில் இருந்தவர்கள் கேலிசெய்து சிரித்தனர். ஆனால் இவர் எதையும் பொருட்படுத்தாது அவர்கள் அனைவரையும் தனது சகோதரர்களாகவும், தனக்குச் சமமானவர்களாகவும் மதித்து எப்போதும் அவர்களுடன் நட்புடன் பழகி அமைதியாக வாழ்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.