2014-03-01 15:52:49

மறைசாட்சிகளின் இரத்தம் இலத்தீன் அமெரிக்காவையும், மத்திய கிழக்கையும் இரத்தக் கயிற்றால் இணைக்கின்றது, கர்தினால் சாந்திரி


மார்ச்,01,2014. கிறிஸ்தவ வரலாற்றில் தொடர்ந்து இடம்பெற்று வரும் அடக்குமுறைகளும் சிலுவைத் துன்பங்களும் நாம் வாழும் இக்காலத்தில் திருஅவையின் எண்ணற்ற பிள்ளைகளையும் விட்டுவைக்கவில்லை என திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருப்பீட இலத்தீன் அமெரிக்க அவையின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளுக்குத் திருப்பலி நிறைவேற்றிய, கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்திரி இவ்வாறு கூறினார்.
பாக்தாத்தின் கத்தோலிக்கப் பேராலயத்தில் கொல்லப்பட்ட 52 கத்தோலிக்க மறைசாட்சிகளையும், இலத்தீன் அமெரிக்காவில் கொல்லப்பட்டுள்ள ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவிகளையும் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் சாந்திரி, மறைசாட்சிகளின் இரத்தம் இலத்தீன் அமெரிக்காவையும், மத்திய கிழக்கையும் இரத்தக் கயிற்றால் இணைக்கின்றது என்று கூறினார்.
மறைசாட்சிகளின் இரத்தம், வரலாற்றின் இருபது நூற்றாண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் உரைத்தார் கர்தினால் சாந்திரி.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.