2014-03-01 15:35:51

புனிதரும் மனிதரே - பதுக்கல் வர்த்தகர்களுக்குப் பயப்படாதப் புனிதர்


1086ம் ஆண்டு, டென்மார்க் நாட்டில், நேர்மையும், பக்தியும் நிறைந்த அரசர், புனித Canute அவர்களை, பகைவர்கள் புனித ஆல்பான் ஆலயத்தில் வெட்டிக் கொன்றபோது, அரசனின் மகன் சார்ல்ஸ் ஒரு சிறுவன். மகனின் உயிரைக் காக்க, சார்ல்ஸின் அன்னை, Flanders பகுதியின் ஆளுனராக இருந்த தன் அண்ணன் இராபர்ட்டிடம் தஞ்சம் புகுந்தார். தாய் மாமன் இராபர்ட் அவர்களின் கண்காணிப்பில் வளர்ந்த சார்ல்ஸ், அவருடன் சேர்ந்து, புனித பூமியைக் காக்கும் போரில் ஈடுபட்டார்.
1119ம் ஆண்டு சார்ல்ஸ், Flanders பகுதியின் ஆளுனராகப் பொறுப்பேற்றார். அறிவு, திறமை, கருணை ஆகிய நற்பண்புகளுடன் அவர் ஆட்சி செய்தார். உணவைப் பதுக்கிவைத்து, பின்னர், கடினமான காலங்களில் அவ்வுணவை உயர்ந்த விலைக்கு விற்றுவந்த பதுக்கல் வர்த்தகர்களுக்கு எதிராக ஆளுனர் சார்ல்ஸ் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதனால் கோபமடைந்த பதுக்கல் வர்த்தகர்கள், பழிதீர்க்கக் காத்திருந்தனர். 1127ம் ஆண்டு, ஒருநாள், சார்ல்ஸ் கோவிலில் செபித்துக் கொண்டிருந்தபோது, பதுக்கல் வர்த்தகர்கள் அவரைச் சூழ்ந்து, கோவிலிலேயே அவரை வெட்டிக் கொன்றனர். தன் தந்தையைப் போலவே, மகனும் கோவிலில் செபித்துக் கொண்டிருந்தபோது கொலையுண்டார். ஆளுனர் சார்ல்ஸ், 'முத்திப்பேறு பெற்ற நல்ல சார்ல்ஸ்' (Bl.Charles the Good) என்று திருஅவையால் போற்றப்பெறுகிறார். இவரது திருநாள், மார்ச் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.