2014-03-01 15:53:05

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஸ்பெயினுக்குத் திருப்பயணம் மேற்கொள்ள அழைப்பு


மார்ச்,01,2014. புனித இயேசுவின் தெரேசா பிறந்ததன் 500ம் ஆண்டையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஸ்பெயினுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது அந்நாட்டு அரசு அதிகாரிகள் குழு ஒன்று.
புனித இயேசுவின் தெரேசா பிறந்த நகரமான அவிலாவின் மேயர் Miguel Ángel Nieto தலைமையிலான குழு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்து, 2015ம் ஆண்டில் சிறப்பிக்கப்படவிருக்கும் இந்த 500ம் ஆண்டு விழாவுக்கு வருகை தருமாறு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தது.
இஸ்பெயின் அரசுத்தலைவர் Castilla y León அரசின் அழைப்புக் கடிதத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்த இக்குழு, இஸ்பெயின் நாட்டின் அனைத்து மக்கள் சார்பாக இவ்வழைப்பை முன்வைப்பதாகத் திருத்தந்தையிடம் கூறியது.
புனித இயேசுவின் தெரேசா எனப்படும் புனித அவிலா தெரேசா, 1515ம் ஆண்டில் அவிலா நகரில் பிறந்தார். இவர், புனித சிலுவை யோவானுடன் சேர்ந்து கார்மேல் சபையை சீர்படுத்தி 17 கார்மேல் சபை இல்லங்களை நிறுவினார். புனித அவிலா தெரேசாவின் இயற்பெயர் Teresa de Cepeda y Ahumada.

ஆதாரம் : Rome Reports







All the contents on this site are copyrighted ©.