2014-03-01 15:52:34

திருத்தந்தை பிரான்சிஸ், ருமேனியப் பிரதமர் சந்திப்பு


மார்ச்,01,2014. ருமேனியப் பிரதமர் Victor Viorel Ponta அவர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் இருபது நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகிய இருவரையும் சந்தித்தார் ருமேனியப் பிரதமர் Viorel Ponta.
இச்சந்திப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீட பத்திரிகை அலுவலகம், குடும்பம், கல்வி, சமய சுதந்திரம், பொதுச்சொத்துக்களைப் பராமரிப்பதில் திருப்பீடத்துக்கும் ருமேனிய நாட்டுக்கும் இடையே ஒத்துழைப்பு போன்ற விவகாரங்கள் இச்சந்திப்புகளில் இடம்பெற்றதாக அறிவித்தது.
ருமேனியாவில் கத்தோலிக்கத் திருஅவையின் நிலைமை குறித்துப் பேசப்பட்டதாகவும், உலகை அச்சுறுத்திவரும் பல்வேறு மோதல்கள் உரையாடல் மூலமாக முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு கூறப்பட்டதாகவும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.
ருமேனியப் பிரதமர் Victor Viorel Ponta அவர்கள், அந்நாட்டு ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் Daniele அவர்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, பரிசுப்பொருளையும் திருத்தந்தைக்கு வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.