2014-03-01 15:53:34

சிறார் கருணைக்கொலை குறித்த பெல்ஜிய அரசின் தீர்மானம் கவலை தருகின்றது, வத்திக்கான் வாழ்வுக் கழக உறுப்பினர்கள்


மார்ச்,01,2014. சிறார்க் கருணைக்கொலையைச் சட்டமாக்குவதற்கு அண்மையில் பெல்ஜிய அரசு எடுத்துள்ள தீர்மானம் கவலை தருகின்றது என திருப்பீட வாழ்வுக் கழக உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த, இந்த வாழ்வுக் கழக நிர்வாக உறுப்பினரும், பிலடெல்பியாவிலுள்ள தேசிய கத்தோலிக்க நன்னெறி மையத் தலைவருமான ஜான் ஹாஸ், பெல்ஜிய அரசின் இத்தீர்மானம் பயங்கரமானதாக உள்ளது எனச் சொல்லியுள்ளார்.
இத்தகைய தீர்மானங்களைச் சுயமாக எடுப்பதற்குச் சிறாரால் இயலாது என்று சொல்லி சிறாரின் உரிமைகளுக்காக அழைப்பு விடுத்துள்ளார் ஜான் ஹாஸ்.
மேலும், பெல்ஜிய அரசின் இத்தீர்மானம் வியப்புக்குரியதாக உள்ளது எனத் தெரிவித்துள்ள ஜெர்மனியின் மருத்துவர் Manfred Lutz, இத்தீர்மானத்தின்படி மாற்றுத்திறனாளிச் சிறாரும் சமூகத்திற்குச் சுமை என்று சொல்லி அவர்களையும் அழித்துவிடுவதற்கு வழி அமைப்பதாய் உள்ளது என குறை கூறியுள்ளார்.
பெல்ஜிய நாடாளுமன்றத்தின் இத்தீர்மானம், அந்நாட்டு அரசர் பிலிப்பின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.