2014-02-28 16:44:22

திருத்தந்தை பிரான்சிஸ் : ஆயர்கள் நிர்வாகிகள் அல்ல, மாறாக அவர்கள் உயிர்த்த கிறிஸ்துவுக்குச் சான்று பகர்பவர்கள்


பிப்.28,2014. ஓர் ஆயரைத் தேர்ந்தெடுக்கும்போது, நமக்கு நிர்வாகிகளோ, ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பவர்களோ நமக்குத் தேவையில்லை, மாறாக தம் மந்தைக்காக வாழும் மற்றும் தம் மந்தைக்கு அருகிலிருக்கும் உயிர்த்த கிறிஸ்துவுக்குச் சான்று பகர்பவர்கள் தேவை என்று ஆயர்கள் குழு ஒன்றிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீட ஆயர்கள் பேராயத்தினரோடு இவ்வியாழனன்று கூட்டம் நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் ஆயரை ஆயர் என்று காட்டுவது எது என்பது குறித்து விளக்கினார்.
ஓர் ஆயரைத் தேர்ந்தெடுக்கும்போது ஒரு நிர்வாகியோ, ஒரு நிறுவன நிர்வாகியோ தேவையில்லை, மாறாக, நற்செய்தியால் வழங்கப்படும் சுதந்திரத்தோடு இவ்வுலகைக் கவரும் செப மனிதர் தேவை என்றும் கூறிய திருத்தந்தை, ஆயர் என்பவர், திருத்தூதர்களின் வழிசெல்வதற்கு அழைக்கப்படுபவர் என்றும் தெரிவித்தார்.
மக்களிடம் நெருக்கமாக இருப்பவர்கள் ஆயர்களாகத் தெரிவுசெய்யப்பட வேண்டுமென்று கடந்த ஆண்டில் திருப்பீடத் தூதர்களிடம் தான் கூறியதையும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள் தங்கள் பதவிக்கு ஆவல் கொள்பவர்களாக இருக்கக் கூடாது என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.