2014-02-27 15:32:26

நம்மிடையே உடன்பிறந்தோருக்குரிய அன்பை வெளிப்படுத்துவதே இயேசு நமக்குத் தந்துள்ள நற்செய்தி, திருத்தந்தை


பிப்.27,2014. நமது இயல்பு, பிறந்த இடம், வயது என்று நம்மிடையேயுள்ள பல வேறுபாடுகளையும் தாண்டி உடன்பிறந்தோருக்குரிய அன்பை நாம் வெளிப்படுத்துவதே இயேசு நமக்குத் தந்துள்ள நற்செய்தி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறையுரையில் கூறினார்.
ஃபோக்கோலாரே பக்த இயக்கத்தைச் சேர்ந்த 77 ஆயர்களை, இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், “கிறிஸ்துவின் சீடர்கள் மத்தியில் நிலவிய அன்பு” என்பதை, அவர்கள் இவ்வாண்டுக் கூட்டத்தின் மையக் கருத்தாகக் கொண்டிருப்பதையும் பாராட்டினார்.
ஒற்றுமையின், ஒப்புரவின் இல்லமாகவும், பள்ளியாகவும் திருஅவையை மாற்றுவதே இந்தப் புதிய மில்லென்னியத்தில் நாம் சந்திக்கும் மிகப்பெரும் சவால் என்று முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் தன் சுற்றுமடலில் கூறியதை மேற்கோளாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், ஒப்புரவும், ஒற்றுமையும் உலகின் மிக ஆழமான ஏக்கம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மனிதர்களை ஒன்றிணைக்கும் இல்லத்தை, பள்ளியை உருவாக்குவது நற்செய்தி அறிவிப்பின் சிகரமாக விளங்கும் ஓர் அர்ப்பணிப்பு என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் தன் உரையில் எடுத்துரைத்தார்.
ஃபோக்கோலாரே பக்த இயக்கம் நடத்தும் கூட்டத்துக்கு அன்னைமரியின் துணையை வேண்டி அவர்கள் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.