2014-02-26 16:00:20

பிப்.27,2014. புனிதரும் மனிதரே. - தாழ்ச்சியால் தண்டனையை விரும்பி அனுபவித்தவர்


பிரான்ஸ் நாட்டின் Montpellier நகர ஆட்சியாளரின் மகனாக 14ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிறந்தார் ரோச். பிறக்கும்போதே இவரின் மார்பில் சிலுவை அடையாளம் இருந்தது. அவரின் 20வது வயதில் பெற்றோர் காலமானதால் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவேண்டிய கட்டாயம் இவருக்கு ஏற்பட்டது. உலக இன்பங்களில் எவ்வித ஆர்வமும் இல்லாத ரோச், தன் சித்தப்பாவிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, பிச்சையெடுத்து வாழும் துறவிபோல் வேடமணிந்து உரோம் நகர் நோக்கிப் பயணமானார். ஆனால் இத்தாலியில் கொடிய உயிர்கொல்லி நோய் பரவி ஆயிரக்கணக்கானோரைப் பலிவாங்கிக்கொண்டிருந்த காலம் அது. உரோம் செல்லும் வழியில் பல நகர்களுக்குச் சென்று அந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களை சிலுவை அடையாளம் இட்டு குணப்படுத்தினார் ரோச். ஆனால் பியச்சென்சா எனும் நகரில் இவருக்கும் அந்நோய் தொற்றிக்கொண்டது. எவருக்கும் தொந்தரவு கொடுக்கவேண்டாம் என்ற நோக்கத்துடன் காட்டுக்குள் சென்று வாழ்ந்தார் ரோச். அப்போது அங்கு வேட்டையாட வந்த ஒரு பிரபுவின் நாய்களுள் ஒன்று யாருக்கும் தெரியாமல் இவருடனேயே தங்கிவிட்டது. அது ஒவ்வொரு நாளும் ஊருக்குள் சென்று இவருக்கு உணவைக் கொண்டுவந்து கொடுத்து இவர் புண்களை நக்கிவிட, சில நாட்களில் முழுக்குணம்பெற்றார் ரோச். பின், தன் சொந்த நகரான பிரான்சின் Montpellierக்கு சென்றார். அங்கே இவரை அடையாளம் தெரியாத படைவீரர்கள, ஒற்றர் என்ற சந்தேகத்தில் கைது செய்து ஆளுனராகிய இவரின் சித்தப்பாவின்முன் கொண்டுபோய் நிறுத்தினர். இவரின் சித்தப்பாவும் இவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை, இவரும் தன்னை யாரென்று வெளிப்படுத்த விரும்பவில்லை. ஒற்றர் என தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டார். உலக சுகங்களிலிருந்து விலகி, இறைவனுடன் தனிமையில் உரையாட தனக்குக் கிடைத்த நல்லதொரு வாய்ப்பு என அதனை எடுத்துக்கொண்ட ரோச், தண்டனையை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார். சிறைக்குள்ளேயே செபவாழ்வை மேற்கோண்ட ரோச், ஐந்து ஆண்டுகளுக்குப்பின் சிறையிலேயே உயிரிழந்தார். அதன்பின்னரே அவரின் மார்பில் இருந்த அடையாளத்தை பார்த்து அவர் யார் எனக் கண்டுகொண்டனர் சிறை அதிகாரிகள். ஆளுனருக்கு உண்மை தெரிவிக்கப்பட்டது. உறவினர்கள் அழுது அரற்றினர். அவரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அதற்குப்பின் அவரின் கல்லறையில் எண்ணற்ற புதுமைகள் இடம்பெறத் துவங்கின. அவரின் பரித்துரையை நாடிச் செபித்தவர்களுக்கு பல வரங்கள் கிட்டியத்தைத்தொடர்ந்து, மக்கள் அவரை புனிதர் என போற்றத் தொடங்கினர். திருஅவையும் ரோச்சை புனிதராக அங்கீகரித்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.