2014-02-26 15:49:44

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


பிப்.,26,2014. உரோம் நகரில் ஆண்டாண்டுகாலமாக பிப்ரவரி மாதம் என்றால் அதிகக் குளிருள்ள காலம் என்றுதான் அனைவருக்கும் தெரியும். ஆனால், உலகெங்கும் இடம்பெறும் அசாதாரண தட்பவெப்பநிலை மாற்றங்கள் உரோம் நகரையும் விட்டுவைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பிப்ரவரி மாதத்தில் எந்த ஆண்டிலும் கண்டிராத இதமான வெயிலை இந்நாட்களில் உரோம் நகர் அனுபவித்துக்கொண்டிருக்க, இப்புதனன்று தூய பேதுரு பேராலய வளாகத்தில், அருளடையாளங்கள் குறித்த தன் மறைக்கல்வி போதனைகளைத் தொடர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அருளடையாளங்கள் குறித்த மறைக்கல்வி போதனையில் இன்று, 'நோயில் பூசுதல்' எனும் அருளடையாளம் குறித்து நோக்குவோம். இந்த அருளடையாளம், நோயாளிகளுக்கும், துன்புறுவோருக்கும், முதியோருக்கும் இறைஇரக்கத்தின் பிரசன்னத்தை வெளிப்படுத்துகின்றது. நல்ல சமாரிரியர் உவமை, துன்புறுவோர்மீது கடவுளின் அன்புநிறை அக்கறையை எடுத்துரைப்பதாக உள்ளது. இயேசுவின் எடுத்துக்காட்டையும் போதனைகளையும் பின்பற்றும் திருஅவை, துன்புறும் மக்களுக்கு நோயில்பூசுதல் எனும் அருளடையாளம் மூலம் இறைவனின் குணமளிக்கும் பிரசன்னத்தை நல்ல சமாரியர் போல் கொண்டுவருகிறது. புனித யாக்கோபு எழுதிய திருமடல் 5ம் பிரிவிலும் இதனை நாம் வாசிக்கிறோம். ஆதிகாலத் திருஅவையிலும் திருஅவை மூப்பர்கள் நோயாளர் மீது எண்ணெய்பூசியும் செபித்தும் இந்த திருப்பணியை தொடர்ந்ததாகக் காண்கிறோம். நோயில் பூசுதல் அருளடையாளத்தை நிறைவேற்றுவதன்மூலம் திருஅவை, துன்பம் மற்றும் மரணம் எனும் ஆழமான மறையுண்மையை எதிர்கொள்ள நம்மோடு இணைந்து நடைபோடுகிறது. இத்தகைய உண்மை நிலைகள் குறித்து பலவேளைகளில் பேச மறுக்கும் இன்றைய நாகரீகத்தில், நாம் இந்த அருளடையாளத்தின் வனப்பையும் சிறப்பையும் அங்கீகரிக்கவும் பாராட்டவும் முன்வரவேண்டிய அத்தியாவசிய தேவை உள்ளது.
நம்மை விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் உறுதிப்படுத்துவதோடு, அவர் அன்பின் மீட்பு சக்தியிலிருந்து நம்மை எதனாலும், தீமையோ மரணமோ என எதனாலும் பிரிக்க முடியாது என்பதை நமக்கு நினைவூட்டும் இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில், அகில உலகத் திருஅவையுடனான ஒருமைப்பாட்டுணர்வுடன், நோயில்பூசுதல் அருளடையாளத்தின் சிறப்பை அங்கீகரிப்போம்.
இவ்வாறு, நோயில்பூசுதல் அருளடையாளம் குறித்து தன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், வெனெசுவேலா நாட்டில் அண்மை நாட்களில் இடம்பெறும் வன்முறைகள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். வன்முறையும் விரோதப்போக்குகளும் வெனெசுவேலா மக்களை பாதித்துவரும் இந்நாட்களில் அரசியல் தலைவர்களும், முக்கிய பொறுப்பிலிருப்போரும், முழு சமூகமும் தேசிய ஒப்புரவிற்காக செயல்பட்டு, ஒருவர் ஒருவரை மன்னித்து, உண்மையான பேச்சுவார்த்தைகளைக் கைக்கொண்டு, உண்மையையும் நீதியையும் மதித்து, பொதுநலனுக்காக உழைக்க வேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.