2014-02-26 16:41:03

இன்றைய தகவல் தொழில்நுட்பம் முன்வைக்கும் சவால்களுக்குப் பதிலளிப்பதற்குக் கத்தோலிக்க ஊடகத்துறையினர் அழைப்பு


பிப்.26,2014. உரோமையில் நடைபெற்றுவரும் SIGNIS உலக மாநாடு, இன்றைய தகவல் தொழில்நுட்பம் முன்வைக்கும் சவால்களுக்குப் பதிலளிப்பதற்குக் கத்தோலிக்க ஊடகத்துறையினருக்கு உதவியாக அமையும் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டார் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர்.
"அமைதிக் கலாச்சாரத்துக்கு ஊடகம் : புதிய தலைமுறையோடு உருவங்களைப் படைத்தல்" என்ற தலைப்பில் உரோமையில் இச்செவ்வாயன்று தொடங்கிய உலக மாநாட்டில் உரையாற்றிய, திருப்பீட சமூகத்தொடர்பு அவைத் தலைவர் பேராயர் Claudio Maria Celli இவ்வாறு கூறினார்.
தாராளமயமாக்கப்பட்ட உலகில் புதிய கலாச்சாரங்கள், புதிய மொழிகள், புதிய உருவங்கள், புதிய கற்பனைகள் ஆகியவை தொடர்ந்து உருவெடுத்துவரும்வேளை, எண்ணற்ற மக்களைத் தொடும் திறன்கொண்ட மொழியில் நற்செய்தியின் ஞானமும், உண்மையும், அழகும் அறிவிக்கப்படுவதற்கு, கத்தோலிக்க ஊடகத்துறையினர் அழைக்கப்படுகின்றனர் என்றும் கூறினார் பேராயர் Celli.
மேலும், இம்மாநாடு பற்றிப் பேசிய, SIGNIS அமைப்பின் தலைவர் அகுஸ்தின் லூர்துசாமி, நம் சிந்தனைகளைப் புதுப்பிப்பதற்கு இம்மாநாடு பல வழிகளில் வாய்ப்புக்களை வழங்குகிறது எனத் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்பவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இப்புதன் பொது மறைபோதகத்திலும் கலந்துகொண்டனர்.
இந்த SIGNIS மாநாடு, வருகிற சனிக்கிழமையன்று நிறைவடையும்.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.