2014-02-25 15:12:18

புனிதரும் மனிதரே - நெருப்பில் இடப்பட்ட பொன் - புனித போலிகார்ப்


திருத்தூதரும், நற்செய்தியாளருமான புனித யோவானின் சீடர்களில் ஒருவரான போலிகார்ப் அவர்கள், 2ம் நூற்றாண்டில் Smyrna என்ற நகரில் ஆயராகப் பொறுப்பேற்றார். அவர் வாழ்ந்த காலத்தில், கிறிஸ்தவர்களை வேட்டையாடுவதை பொழுதுபோக்காகக் கொண்டு மகிழ்ந்தது உரோமையப் பேரரசு. எனவே, கிறிஸ்தவர்கள், வயதில் முதிர்ந்த ஆயர் போலிகார்ப் அவர்களை, வெவ்வேறு இடங்களில் ஒளித்துவைத்தனர். இறுதியில் காவலர்கள் அவர் இருந்த வீட்டைக் கண்டுபிடித்தனர்.
தன்னைக் கைதுசெய்ய வந்திருந்த காவலர்களுக்கு ஆயர் போலிகார்ப் அவர்கள் அறுசுவை விருந்தளித்தார். பின்னர், அவர்களிடம், "நான் ஒரு மணி நேரம் செபிப்பதற்கு அனுமதி தாருங்கள்" என்று கேட்டார். அவர்கள் அனுமதி தந்ததும், அவர் செபிப்பதற்குச் சென்றார். இரண்டு மணி நேரம் ஆகியும் அவர் திரும்பாததால், காவலர்கள் வீட்டிற்குள் சென்றனர். அங்கு, செபத்தில் ஆழ்ந்திருந்த, 86 வயது நிறைந்த ஆயர் போலிகார்ப் அவர்களைக் கண்ட காவலர்கள், அந்தப் புனிதரை, தாங்கள் ஏன் கைது செய்ய வந்தோம் என்று தயங்கி நின்றனர். இருப்பினும், மேலிடத்து உத்தரவை மீற முடியாமல், அவரைக் கைது செய்து, இழுத்துச் சென்றனர்.
ஆயர் போலிகார்ப் அவர்கள், சித்திரவதைபட்டு இறப்பதைக் காண வந்திருந்தக் கூட்டத்திற்குமுன், ஆயரை நெருப்பிலிடவேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டது. அவரை எரிப்பதற்காக மூட்டப்பட்ட நெருப்பு, ஒரு வளையம்போல் அவரைச் சுற்றி, சற்றி வந்தது. நெருப்பில் இடப்பட்ட பொன்னைப் போல் அவர் ஒளிர்ந்ததைக் கண்ட மக்கள் வியந்தனர். நெருப்பு அவரைத் தீண்டவில்லை என்பதை அறிந்த ஒரு வீரன் அவரை ஈட்டியால் குத்தவே, ஆயரான புனித போலிகார்ப் அவர்களின் உயிர் பிரிந்தது. புனித போலிகார்ப் அவர்களின் திருநாள், பிப்ரவரி 23ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.