2014-02-24 15:03:28

வாரம் ஓர் அலசல் – இழந்த உயிரைத் திரும்பப்பெற முடியுமா?


பிப்.24,2014. RealAudioMP3 உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்.
இயேசுவின் இந்த மலைப்பொழிவுப் போதனையை, நான் கலந்துகொண்ட இஞ்ஞாயிறு திருப்பலி மறையுரையில் விளக்கிய அருள்பணியாளர், இப்போதனையில் இயேசு சொல்லித்தந்த சமூக நீதிகளை அருமையாகச் சுட்டிக்காட்டினார். நாம் ஒருவரை கன்னத்தில் அறைவதற்கு, எடுத்த எடுப்பில் நமது வலதுகையை ஒங்கி, அடுத்தவரின் இடது கன்னத்தில் அறைகிறோம். அப்போது நமது உள்ளங்கை அறைபவரின் இடது கன்னத்தைத் தொடும். ஆனால் ஒருவரை வலக்கன்னத்தில் அறைய வேண்டுமானால், அறைபவர் தனது புறங்கையாலே அவரை அறையவேண்டும். ஆனால் அக்காலத்து யூதச் சட்டப்படி, புறங்கையால் அறைவது மிகவும் இகழ்ச்சியான, அவமதிப்புக்குரிய செயலாகும். ஒருவர் தனது உள்ளங்கையால் அடுத்தவரை அறைந்தால் 200 zuzims அபராதம் விதிக்கப்படும். அதேசமயம், புறங்கையால் அறைந்தால் 400 zuzims அபராதம் விதிக்கப்படும். எனவே ஒருவரை புறங்கையால் அறைவது யூதச்சட்டப்படி பெரும் அவமதிப்புச் செயலாகும். ஆதலால் இயேசு சொன்னார் : உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள் என்று. அப்படிச் செய்யும்போது அறைபவர் தனது இழிசெயலை உணர்வார் என்ற சமூக நீதிப் போதனையை இயேசு சொல்லித் தருகிறார். அதேபோல் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குத் தொடுத்து, அதற்குத் தீர்ப்பாக அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால், அந்த ஆளிடம் மற்ற உள்ளாடைகளையும் எடுத்துக்கொள்ள அனுமதியுங்கள். அப்போது அப்படிக் கொடுத்தவரை ஆடையின்றிப் பார்க்கும் அவர் வெட்கித் தலைகுனிவார் என்பது இயேசு சொல்லித்தரும் மற்றொரு சமூகநீதி.
இயேசுவின் பாதையைப் பின்பற்றி, அன்றும் இன்றும் பலர் மனித சமுதாயத்தில் சமூக நீதியை நிலைநாட்டி, மனிதரை மாண்புடன் வாழ வைப்பதற்கு முயற்சித்து வருகின்றனர். கடந்த செவ்வாயன்று இந்திய உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு தீர்ப்பு பலரின் மனதில் பால் வார்த்திருக்கிறது. 1991ம் ஆண்டு மே 21ம் தேதி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் அத்தண்டனையை உச்ச நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. இந்தத் தீர்ப்பு, மரண தண்டனை முற்றிலும் மரணம் அடைந்துவிடுமா என்ற ஆவலையும், நல்ல சிந்தனையுடைய அனைவரிலும் எழுப்பியுள்ளது. ஒரு கொலைக்கு இன்னொரு கொலை பதிலாக இருக்க முடியாது என்கிற மனித உணர்வு, சட்டப் புத்தகங்களில் மறைந்திருப்பதை இந்தத் தீர்ப்புத் தெளிவாகக் காட்டியுள்ளது. “உயிர் இறைவனால் அளிக்கப்பட்டது. அதனைப் பறிக்க இறைவனைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை” என மகாத்மா காந்திஜி சொன்ன கூற்று, முதன்முதலாக நீதித் துறையால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. பேரறிவாளன், முருகன், சாந்தனு ஆகிய மூவரின் மரணதண்டனை இரத்து செய்யப்பட்டிருப்பது, மனிதாபிமானம், மனித உரிமை, மனச்சாட்சி ஆகிய மூன்றுமே காப்பாற்றப்பட்டுள்ளன என்று விகடன் இதழ் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியை எதிர்த்து 1857ம் ஆண்டில் நடந்த முதல் சுதந்திரப் புரட்சியில் ஈடுபட்டவர்களை ஒடுக்குவதற்காக ஏழு வகையான குற்றங்களுக்கு மரண தண்டனை தரலாம் என்று, 1860ம் ஆண்டில் மெக்காலே ஒரு குற்றவியல் சட்டத்தை எழுதினார். இந்திய அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல்; இராணுவத்தினர் கலகம் விளைவித்தல்; ஒரு நிரபராதியைத் தூக்கிலிடுவதற்குப் போலி ஆவணம் தயாரித்தல்; கொலை செய்தல்; குழந்தை, மனநோயாளி, மது அருந்தியவர்... இந்த மூவரையும் தற்கொலை செய்யத் தூண்டுதல்; ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும்போதே கொலைசெய்ய முயற்சித்தல்; கொள்ளையடிக்கும்போது கொலை செய்தல் - ஆகிய ஏழு வகையான குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்றது இந்தச் சட்டம். இந்தச் சட்டத்தில் 1955ம் ஆண்டுக்குப் பிறகு செய்யப்​பட்ட மிக முக்கியமான மாற்றத்தில், இக்குற்றங்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை அளிக்கலாம், அதற்குச் சரியான காரணம் சொல்லப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது. அன்பர்களே, ஒரு கண்ணைப் பிடுங்கினால் அடுத்த கண்ணைப் பிடுங்கு என்பது போன்ற பழிக்குப்பழி தண்டனைகள் இன்று பல நாடுகளில் மறைந்துவிட்டன. குற்றவாளிகள் திருந்தி வாழும் வாய்ப்பை உருவாக்குபவையாக தண்டனைகள் இருக்க வேண்டும் என்றே உலக நாடுகள் பல உணர்ந்து செயல்படுகின்றன. உயிரைப் பறிப்பது தவறு, மனிதருக்குத் திருந்தி வாழும் வாய்ப்பு தரப்பட வேண்டுமென்ற சமூக நீதி உணர்வு பலரில் வேரூன்றத் தொடங்கிவிட்டன.
ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஆண்டுதோறும் பிப்ரவரி 20ம் தேதியன்று அனைத்துலக சமூக நீதி நாளைக் கடைப்பிடிக்கின்றது. கடந்த வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட இந்நாளுக்கென செய்தி வழங்கிய ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், உலகில் எந்த இடத்தில் சமூக நீதி காக்கப்படாமல் இருந்தாலும் அது நம் அனைவருக்குமே இகழ்ச்சி என்று கூறினார். உலகில் ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி, விரிந்தும் வளர்ந்தும் வருகின்றதென்றும், சமத்துவம், நீதி, பன்மைத்தன்மையை மதித்தல், சமூகப் பாதுகாப்புக்கு வழி அமைத்தல், பணியிடங்கள் உட்பட அனைத்து நிலைகளிலும் மனித உரிமைகள் மதிக்கப்படல் ஆகியவையே சமூக நீதி என்றும் பான் கி மூன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 101 வயது மதிக்கத்தக்க வேட்பாளர் ஒருவர் போட்டியிடுகிறார் என, கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு செய்தி வெளியானது. தேர்தலில் போட்டியிடும் ஜோ நியூமென் என்ற 101 வயது இளைஞர் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சரசோட்டா நகரில் வாழ்பவர். இவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 16 வயதில் இருந்து நான் சந்தித்த சமூகக் குறைபாடுகளுக்குத் தீர்வு காண விரும்பினேன், வாழ்ந்து முடிப்பதற்குள் இந்த நாட்டிற்கும், சமூகத்திற்கும் ஏதாவது செய்யாவிட்டால், என்னுடைய முகத்தை நான் எவ்வாறு கண்ணாடியில் பார்க்க முடியும்? என்னைப் பார்த்து எவரும் முட்டாள் என்று கூறுவதை நான் பொருட்படுத்தவில்லை, சமூக முன்னேற்றங்களில் அக்கறை செலுத்தாத அமெரிக்க அரசு புதிய திட்டங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்துகிறது, எனவே சமூகத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளார். நாடுகளில் நெருக்கடிகளைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் மக்கள் பொறுத்தது போதும், பொங்கியெழு என்ற முறையில் போராட்டத்தில் இறங்குகின்றனர். உக்ரெய்ன் நாட்டில் நடந்துவரும் மக்கள் கொந்தளிப்புக்களைப் பார்த்து வருகிறோம். அந்நாட்டினர், தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து சமூக நீதிக்காகவும், தாங்கள் மாண்புடன் வாழவும் போராடி வருகின்றனர். அந்நாட்டின் அரசத்தலைவர் Viktor Yanukovych எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலையில், உக்ரெய்ன் நாடாளுமன்றம், சபாநாயகர் Oleksandr Turchynovவிடம் இடைக்கால அரசை அமைக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. உக்ரெய்ன் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளில் இந்நாள்களில் பலர் உயிரிழந்துள்ளனர். இழந்த உயிர்களைத் திரும்பப்பெற முடியுமா?
புகழ்பெற்ற ஓவியர் மிக்கேல் ஆஞ்சலோ ஒருமுறை தன்னுடைய சிற்பக் கூடத்தில் மிகவும் கஷ்டப்பட்டு ஓர் ஓவியத்தை அழகாகச் செதுக்கி கொண்டிருந்தார். பல நாட்களாக பார்த்துப் பார்த்து எந்தக் குறையுமின்றி அந்தச் சிற்பத்தை செதுக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய சிற்பக்கூடத்திற்கு வந்த மூன்று நண்பர்கள், அங்கிருந்த சிற்பங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். தன்னை மறந்து சிற்பங்களைச் செதுக்கிக் கொண்டிருந்த மிக்கேல் ஆஞ்சலோவிடம், இந்தச் சிலையின் மூக்கு சரியில்லை, கோணலாக உள்ளது, இதை கொஞ்சம் சரிசெய்யுங்கள் என்றனர். அந்த சிற்பத்தை திரும்பவும் பார்த்தார், பிறகு சுத்தியலை எடுத்துக்கொண்டு மேலே ஏறி சரி பண்ணினார் மிக்கேல் ஆஞ்சலோ. அப்பொழுது அந்தச் சிலையைப் பார்த்த நண்பர்கள் ஆஹா பிரமாதம்! என்றனர். இதனைக் கேட்ட மிக்கேல் ஆஞ்சலோ, இப்படிப்பட்ட நண்பர்கள்தான் எனக்குத் தேவை. குறைகளைச் சொல்வதன் மூலம் என்னால் சரி செய்யமுடிகிறது என்று தெரிவித்தார். ஆனால் அந்தச் சிலையில் எந்த குறையும் இல்லை என்பது மிக்கேல் ஆஞ்சலோவிற்கு நன்றாகத் தெரியும். எனவே சுத்தியலையும், உளியையும் வைத்துக் கொண்டு சரிசெய்வது போல் அவர் நடித்துக் கொண்டிருந்தார். உளியின் சத்தத்திற்கு ஏற்ப சலவைக் கற்களைக் கீழே போட்டார், அதைக் கண்ட நண்பர்கள் உண்மையிலேயே மூக்கைச் சரிபண்ணியதாக நினைத்துக் கொண்டனர். இதுதான் உண்மையில் நடந்தது.
அப்போது புகழின் உச்சியில் இருந்த மிக்கேல் ஆஞ்சலோ நினைத்திருந்தால், எனது சிற்பத்தில் என்ன குறை எனக் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் எதுவுமே கேட்கவில்லை. ஆம். எந்த விடயத்தையும் பொறுமையாகக் கையாண்டால் சண்டை வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஓர் உயிர் என்ன, எத்தனை உயிர்களும் காவு கொடுக்கப்பட மாட்டாது. ஒரு தூக்கு மரம்கூடத் தேவைப்படாது. சமூக நீதிகளும் காக்கப்படும்.







All the contents on this site are copyrighted ©.