2014-02-24 15:01:43

புனிதரும் மனிதரே : நிபந்தனை விதித்து முதுபெரும் தந்தையானவர்(St.Tarasius)


கான்ஸ்டான்டிநோபிள் பேரரசர் லியோ காலத்தில், Iconoclasts என்ற சமய எதிர்ப்பாளர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராகக் கிளம்பி, சமயம் சார்ந்த திருவுருவங்கள், பிற அடையாளங்கள், நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றை அழித்து வந்தனர். ஆயினும் தனது தனிப்பட்ட வாழ்வில் உண்மையான கிறிஸ்தவராக வாழ்ந்தவர் பேரரசி ஐரின். பேரரசர் லியோ இறந்த பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் அவர்களின் பத்து வயது மகன் 6ம் கான்ஸ்ட்டைன். தனது மகனின் ஆட்சியில் முக்கிய உறுப்பினராக இருந்த பேரரசி ஐரின், அப்பேரரசரில் உண்மையான கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதை நிறுத்துவதற்கு விரும்பினார். அதேசமயம் கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தையாக இருந்த 6ம் பவுல், பேரரசர் லியோ காலத்தில் நடந்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்ய விரும்பி துறவியாகிவிட்டார். அப்போது பேரரசர் 6ம் கான்ஸ்ட்டைனுக்கு அரசுச் செயலராக இருந்தவர் தராசியுஸ். இவரே முதுபெரும் தந்தையாவதற்குத் தகுதியானவர் என்று முதுபெரும் தந்தை 6ம் பவுல் பரிந்துரைத்தார். பேரரசி ஐரினும் பொதுநிலையினரான தராசியுசை முதுபெரும் தந்தையாக நியமித்தார். அரசவையும் குருக்களும், பொதுமக்களும் இதற்கு ஒரே மனதாக ஒப்புதல் தெரிவித்தனர். கிறிஸ்தவத் திருவுருவங்களை அழிக்கும் செயலுக்கு ஆதரவு அளிக்கும் அரசை தனது மனச்சான்றின்படி ஏற்க இயலாமல் இருந்த தராசியுஸ், ஒரு நிபந்தனையுடன் முதுபெரும் தந்தை பொறுப்பை ஏற்றார். உடனடியாக ஒரு பொதுச்சங்கத்தைக் கூட்டி புனிதர்களின் திருவுருவங்களுக்கு வணக்கம் செய்வது குறித்து ஏற்பட்டிருந்த தகராறுகளைத் தீர்க்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. கி.பி.784ம் ஆண்டில் கிறிஸ்மஸ் அன்று முதுபெரும் தந்தையாகத் திருப்பொழிவு செய்யப்பட்ட தராசியுஸ், உடனடியாக திருத்தந்தை முதலாம் ஏட்ரியன் அவர்களுக்கும், அனைத்துக் கிறிஸ்தவ முதுபெரும் தந்தையர்க்கும் கடிதம் எழுதி இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டார். அதன்படி ஆலயங்களில் திருவுருவங்கள் வைக்கப்பட்டன. அதன் நோக்கங்களும் விளக்கப்பட்டன. 795ம் ஆண்டில் பேரரசர் 6ம் கான்ஸ்ட்டைன் தனது மனைவியை விலக்கிவிட்டு இரண்டாவது திருமணம் செய்வதற்கு முதுபெரும் தந்தை தராசியுஸ் அனுமதியளிக்கவில்லை. இப்படி அனுமதித்தால் பேரரசரைப் பின்பற்றி பல அரசு அதிகாரிகளும் மற்றவர்களும் பலதாரத் திருமணத்தை ஆதரிக்க வழி அமையும் என்று சொல்லி அதற்கு உறுதியாக மறுத்துவிட்டார். அதனால் பேரரசர், முதுபெரும் தந்தை தராசியுசை வெறுத்து, பகைக்கத் தொடங்கினார். எனினும், முதுபெரும் தந்தை தராசியுஸ் செபத்திலும், தபத்திலும், மக்களைச் சீர்படுத்துவதிலும், நோயாளிகளை இல்லங்களில் சந்திப்பதிலும் தம் வாழ்வைச் செலவழித்தார். பகைவர்களின் கடும் குற்றச்சாட்டுகளைப் பொறுமையோடு ஏற்றுக்கொண்ட புனித தராசியுஸ் 806ம் ஆண்டில் மரணமடைந்தார். இப்புனிதரின் விழா பிப்ரவரி 25.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.