2014-02-24 16:55:14

திருத்தந்தை பிரான்சிஸ் - தலைமைத்துவப் பணிகளைக் கொண்டிருப்பவர்கள், அதிகாரங்களின் உரிமையாளர்கள் அல்ல


பிப்.24,2014. திருஅவையில் போதித்தல், அருள் அடையாளங்களை நிறைவேற்றுதல் என பல்வேறு தலைமைத்துவப் பணிகளைக் கொண்டிருப்பவர்கள், தாங்கள் சிறப்பு அதிகாரங்களின் உரிமையாளர்கள் என்ற பாணியில் செயல்படாமல், சமுதாயத்திற்குப் பணியாற்றுபவர்களாகச் செயல்படவேண்டும் என்று அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
சனிக்கிழமையன்று திருஅவையில் புதிதாக உருவாக்கப்பட்ட கர்தினால்களுடன் இணைந்து, இஞ்ஞாயிறன்று புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய பின்னர், புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையில் அதிகாரம் என்பது பணிபுரிவதற்கு வழங்கப்பட்ட ஒரு வாய்ப்பு என்பதை வலியுறுத்திக் கூறினார்.
சேவை உணர்வுடன் செயல்படவேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதத்துவத்தின் பாதையில் மகிழ்வுடன் நடைபயில விசுவாசிகளுக்கு உதவவேண்டியது தலைமைத்துவ பணி ஏற்றுள்ளோரின் கடமை என்றார்.
ஒன்றிப்பைக் கட்டி எழுப்புவதை நோக்கமாகக் கொண்டு, ஒவ்வொரு கிறிஸ்தவரும், ஒருவர் மற்றவருக்குக் கைகொடுக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த திருத்தந்தை, தங்கள் மேய்ப்பர்களுக்காக செபிக்கவேண்டிய விசுவாசிகளின் கடமையையும் வலியுறுத்தினார்.
நல்ல தலைவர்கள் என்பதைவிட, நல்ல பணியாளர்கள் என்ற வகையில் திருஅவையின் தலைவர்கள் செயல்பட உதவுமாறு செபிப்போம் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.