2014-02-24 16:55:37

இந்தியாவில் திருப்பயணம் மேற்கொள்ள திருத்தந்தைக்கு ஆயர் பேரவை அழைப்பு


பிப்.24,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இந்தியாவில் திருப்பயணம் மேற்கொள்ள அழைக்கவேண்டும் என இந்திய ஆயர் பேரவை விடுத்த விண்ணப்பத்தை இந்தியப் பிரதமர் ஏற்றுள்ளதாக, இந்திய ஆயர் பேரவை வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறுகிறது.
இந்திய கர்தினால்கள் நான்குபேரும் ஏற்கனவே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்து இந்தியாவில் திருப்பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளபோதிலும், அரசு அதிகாரப்பூர்வ அழைப்புவிடுக்கவேண்டுமென இந்திய ஆயர்பேரவையின் துணைப் பொதுச்செயலர் அருட்திரு. ஜோசப் சின்னையனும், மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கர் ஃபெர்னாண்டசும் இணைந்து பாரதப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துக் கேட்டுக்கொண்டனர்.
இந்திய ஆயர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்திற்கு பதிலளித்த பாரதப் பிரதமர், தகுந்த நேரத்தில் அழைப்பு விடப்படும் எனவும், அதற்கான முயற்சிகளை தன் அரசு மேற்கொள்ள உள்ளதாகவும் உறுதியளித்தார்.
இந்திய ஆயர்களின் அழைப்பைத் தொடர்ந்து இந்தியாவில் திருப்பயணம் மேற்கொள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆர்வம் கொண்டுள்ளதாகவும், இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அழைப்பு அதற்கு அவசியம் என்பதால் பிரதமரை ஆயர் பேரவை பிரதிநிதி சந்தித்து விண்ணப்பத்தை முன்வைத்ததாகவும் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.