2014-02-22 15:35:49

திருஅவை புதிய கர்தினால்களிடம், ஒன்றிப்பு, துணிச்சல், ஒத்துழைப்பு, செபம் ஆகியவற்றைக் கேட்கிறது, திருத்தந்தை பிரான்சிஸ்


பிப்.22,2014. கர்தினால்கள் திருஅவைக்குத் தேவைப்படுகின்றனர், எல்லாக் காலத்திலும் எல்லா நேரங்களிலும் நற்செய்தியை அறிவிப்பதற்கும், உண்மைக்குச் சாட்சியம் அளிப்பதற்குமான அவர்களின் துணிச்சல், அவர்களின் ஒத்துழைப்பு, இன்னும் சிறப்பாக, திருத்தந்தையோடும் கர்தினால்களுக்குள்ளும் ஒன்றிப்பு, இறைமக்களுக்கான அவர்களின் செபம் போன்றவை தேவைப்படுகின்றன எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் முற்பகல் 11 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில், 18 புதிய கர்தினால்களுக்குச் சிவப்புத் தொப்பி, மோதிரம் ஆகியவற்றை வழங்கும் திருவழிபாட்டில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால்களின் கருணை, குறிப்பாக, இக்காலத்தில் துன்பமும் வேதனையும் அனுபவிக்கும் உலகின் பல நாடுகளுக்கு அவர்களின் கருணை தேவைப்படுகின்றது என்று கூறினார்.
பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளால் துன்புறும் திருஅவைச் சமூகங்கள் மற்றும் அனைத்துக் கிறிஸ்தவர்களுடனான நமது ஆன்மீக நெருக்கத்தைத் தெரிவிப்போம் என்றும், இம்மக்கள் விசுவாசத்தில் உறுதியாய் இருக்கவும், தீமையை நன்மையால் வெல்லவும் அவர்களுக்கான நம் செபம் திருஅவைக்குத் தேவைப்படுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
நம் சொல்லாலும், நம்பிக்கையாலும், செபங்களாலும் அமைதியை ஏற்படுத்துபவர்களாக இருப்பதற்குத் திருஅவைக்கு நாம் தேவைப்படுகின்றோம் எனவும், இக்காலத்தில் வன்முறை மற்றும் போர்களை அனுபவிக்கும் மக்களுக்கு அமைதியையும் ஒப்புரவையும் வேண்டுவோம் எனவும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை.
“இயேசு தம் சீடர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார்..”(மாற்.10:32) என்ற நற்செய்தி திருசொற்களுடன் மறையுரையைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு எப்போதும் நமக்கு முன்னே போய்க்கொண்டிருக்கிறார், நமக்குப் பாதையைக் காட்டுகிறார், இதுவே நம் நம்பிக்கை மற்றும் மகிழ்வின் ஊற்று எனக் கூறினார்.
இயேசு சிலுவையின் பாதையைத் தேர்ந்துகொண்டதால் அப்பாதை எளிதானதோ அல்லது வசதியானதோ அல்ல, ஆயினும், இயேசுவின் சீடர்கள் போன்று நாம் பயப்படத் தேவையில்லை, ஏனெனில் அவர் வெற்றி பெற்றுவிட்டார், சிலுவையே நம் நம்பிக்கை என்றும் திருத்தந்தை கூறினார்.
இயேசு சீடர்களைத் தம்மிடம் வரவழைத்து விளக்கியது பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு நம்மையும் அழைப்பதற்கு நாம் அனுமதிப்போம், நாம் ஒன்றிணைந்து ஆண்டவருக்குப் பின்னால் நடப்போம், விசுவாசிகள் மத்தியில், புனித தாய்த்திருஅவை மத்தியில் நாம் எப்போதும் இயேசுவால் ஒன்றாக அழைக்கப்படுகின்றோம் எனக் கூறி, தனது மறையுரையை நிறைவு செய்தார்.
புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருந்த Msgr.Loris Capovilla அவர்கள் உடல்நிலை காரணமாக இத்திருவழிபாட்டில் கலந்துகொள்ளவில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.