2014-02-22 15:37:28

கோடை மழை இயல்பை அறிய அரபிக்கடலில் துளையிடப்படுகிறது


பிப்.22,2014. இந்தியாவில், கோடை மழையின் இயல்பை அறிய, இமயமலையின் படிமங்கள் நிறைந்த பகுதியான, அரபிக்கடலில், துளையிட்டு ஆய்வு செய்யும் பணி, அடுத்தாண்டு, மார்ச் மாதத்திற்குப் பின் துவங்கும், என, மத்திய, பூமி அறிவியல் துறையின் செயலர் சைலேஷ் நாயக் தெரிவித்தார்.
இந்திய வானிலை சங்கம் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் சார்பில், பருவமழை கண்காணிப்பு மற்றும் போலி நிகழ்வு குறித்து இவ்வெள்ளியன்று துவங்கிய அனைத்துலக நான்கு நாட்கள் கருத்தரங்கில் இவ்வாறு சைலேஷ் நாயக் கூறினார்.
இந்தியாவில் பெய்யும் கோடை மழையானது, விவசாயம், நீர் ஆதாரங்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தையே பாதித்து வருகிறது எனவும், கோடை மழையில் நிகழும் மிகப்பெரிய மாற்றமானது, பெருவெள்ளத்தையும், வறட்சியையும் ஏற்படுத்துகிறது எனவும். கோடை மழைக்கும், இமய மலையின் வளர்ச்சிக்கும் தொடர்புண்டு எனவும் அவர் கூறினார்.
25 ஆயிரம் ஆண்டுகளுக்குரிய, மழைப்பொழிவின் வரலாறு, வண்டல் படிமங்கள் மூலம் கிடைக்கின்றன என்பதால், பழைய வரலாறு அடிப்படையில், இனிவரும், காலங்களில் பருவமழையின் இயல்பைக் கணிக்கலாம் என்றுரைத்த சைலேஷ் நாயக், இந்தியப் பெருங்கடல் ஆழ்கடல் துளையிடும் திட்டத்தின்படி, அரபிக் கடலில், 2015ல், லட்சுமி பேசின் பகுதியில் துளையிட்டு, அதில் கிடைக்கும் படிமங்கள் கொண்டு ஆய்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

ஆதாரம் : தினமலர்







All the contents on this site are copyrighted ©.