2014-02-21 15:53:21

பணிகளில் பலன்தராத விசுவாசம் விசுவாசமே இல்லை, திருத்தந்தை பிரான்சிஸ்


பிப்.21,2014. பணிகளில் பலன்தராத விசுவாசம் விசுவாசமே இல்லை என்று, இவ்வெள்ளி காலை வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளியன்று தனது 90வது பிறந்தநாளைச் சிறப்பித்த, பிளாரன்ஸ் நகரின் முன்னாள் பேராயர் கர்தினால் Silvano Piovanelli அவர்களுக்காக நன்றித் திருப்பலி நிறைவேற்றி அவரின் பணிகள், சாட்சிய வாழ்வு மற்றும் அவரின் நன்மைத்தனத்துக்காக நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வுலகம், நம்பிக்கைதரும் வார்த்தைகளைப் பேசும் கிறிஸ்தவர்களை அதிகமாகக் கொண்டிருக்கின்றது, ஆனால் அவர்களில் வெகுசிலரே அவற்றை நடைமுறைப்படுத்துகின்றனர் என்று மறையுரையில் உரைத்த திருத்தந்தை, ஒருவர் அனைத்துக் கட்டளைகளையும், அனைத்து இறைவாக்குகளையும், விசுவாசத்தின் அனைத்து உண்மைகளையும் கற்கலாம், ஆனால் அவற்றை நடமுறையிலும், தனது பணியிலும் பயன்படுத்தாவிட்டால் அவை பயனற்றவை என்று கூறினார்.
கோட்பாடுகளைத் தெரியாத மக்கள் விசுவாசத்தை அதிகமாகக் கொண்டிருந்ததற்கு நற்செய்திகளில் எடுத்துக்காட்டுகள் உள்ளன என்றுரைத்தவேளை, இதற்கு சமாரியப் பெண், கனானேயப் பெண், பார்வையிழந்தவர் ஆகிய மூவரைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, விசுவாசமும் சாட்சிய வாழ்வும் பிரிக்க முடியாதவை என்று கூறினார்.
விசுவாசம் என்பது, இயேசு கிறிஸ்துவோடும் கடவுளோடும் கொள்ளும் சந்திப்பாகும், இதிலிருந்தே விசுவாசம் பிறக்கின்றது, இதிலிருந்து இது நம்மை சாட்சிய வாழ்வுக்கு இட்டுச்செல்கின்றது என்றும், இதனாலே திருத்தூதர் யாக்கோபு செயல்கள் இல்லாத விசுவாசம் விசுவாசமே அல்ல என்றும் கூறினார் என மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.