2014-02-20 16:00:55

"ஏழைகளுக்காய் ஏழையாய்: திருஅவையின் மறைப்பணி" - விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவர் எழுதியுள்ள நூல்


பிப்.20,2014. “ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே” என்று இயேசு கூறியதன் பொருளை தான் பெரு நாட்டில் லீமா நகரின் சேரிகளில் கண்டதாக வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
வருகிற சனிக்கிழமை கர்தினாலாகப் பொறுப்பேற்கவிருக்கும் விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவர் பேராயர் Gerhard Ludwig Müller அவர்கள், "ஏழைகளுக்காய் ஏழையாய்: திருஅவையின் மறைப்பணி" என்ற தலைப்பில், பிப்ரவரி 25ம் தேதி வெளியிடவிருக்கும் நூலில் இவ்வாறு கூறியுள்ளார்.
"சாலையின் ஓரத்தில் மீட்பு ஆரம்பமாகிறது" என்ற தலைப்பில், இந்நூலின் முதல் பிரிவில் பேராயர் Müller அவர்கள் எழுதியுள்ள கருத்துக்களின் சுருக்கத்தை, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano வெளியிட்டுள்ளது.
இறைவனின் அன்பும், செயல்பாடும் வறுமையில் சிக்கியுள்ளவர்களை மட்டும் விடுவிப்பதில்லை, ஏனையோரை வறுமையில் கட்டிவைக்கும் செல்வரையும், பேராசையிலிருந்தும், செல்வம் என்ற பொய் தெய்வ வழிபாட்டிலிருந்தும் விடுவிக்கின்றது என்று பேராயர் Müller எடுத்துரைத்துள்ளார்.
300க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட இந்நூல், வத்திக்கான் நூலகத்தின் வெளியீடாக பிப்ரவரி 25, வருகிற செவ்வாயன்று வெளியிடப்படும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.