2014-02-19 15:01:21

மாற்று எரிபொருள் ஆய்வில் சென்னையைச் சேர்ந்த இரு மாணவர்கள் வெற்றி


பிப்.19,2014. பெருகிவரும் வாகனங்கள் மற்றும் பல்வேறு தேவைகளின் காரணமாக எரிபொருள் பற்றாக்குறை கடுமையான அளவில் உயர்ந்து வரும்நிலையில் மாற்று எரிபொருள் ஆய்வில் சென்னையைச் சேர்ந்த இரு மாணவர்கள் வெற்றி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியில் இருக்கும் ஹை டெக் ரிசர்ச் பவுண்டேஷன் என்ற ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பொறியியல் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் கார்த்திகேசன், சிவச்சந்திரன் ஆகியோர் ஒரு புதிய முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர்.
இவர்களின் ஒருங்கிணைந்த ஆய்வின் விளைவாக தண்ணீரை மின்னாற்பகுப்புக்கு உட்படுத்தி அதிலிருந்து ஹைட்ரஜன் வாயுவைப் பிரித்தெடுத்து அதனை எரிபொருளோடு சேர்த்து பயன்படுத்தி வாகன மோட்டாரை இயக்கமுடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.
இதற்கான ஆய்வுகள் உலகளவில் நடந்து வந்தாலும் முடிவுக்கு வந்திருக்கும் இவர்களின் ஆய்வை அமெரிக்க அரசு ஏற்று, ஒப்புதல் கடிதம் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் எரிபொருள் செலவைப் பாதியாகக் குறைக்கும் ஒரு கருவி என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். 300 கிராம் எடையுள்ள இதனை ஒரு இரு சக்கர வாகனத்தில் பொருத்திவிட்டால் லிட்டருக்கு 60 கிலோ மீட்டர் தூரம் செல்லும் அந்த வாகனம் 90 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் என்று, தாங்கள் கண்டுபிடித்துள்ள புதிய கருவியைப் பற்றி கார்த்திகேசனும், சிவச்சந்திரனும் கூறினர்.
மாணவர்களின் எண்ணத்தை உள்வாங்கி இக்கருவியைத் திறம்படச் செய்து முடித்திருக்கும் ஹைடெக் ரிசர்ச் பவுண்டேஷனை சேர்ந்த இளம் அறிவியலாளர் முரளி அவர்கள், எரிபொருளே இல்லாமல் முழுக்க முழுக்கத் தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி வாகனங்களை இயக்க ஒரு வருட காலமாகவே ஆய்வு செய்து வரும் எங்களுக்கு, இந்த மாணவர்களின் ஆய்வு பெரும் முன்னேற்றத்துக்கு வழி வகுத்திருக்கிறது என்று கூறினார்.

ஆதாரம் தி இந்து








All the contents on this site are copyrighted ©.