2014-02-19 14:57:34

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


பிப்.,19,2014. நம் வாழ்வின் துவக்க கால அருளடையாளங்கள் குறித்து தன் போதனைகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், இவ்வாரமும் அதன் தொடர்ச்சியாகவே உரைவழங்கினார். நம் வாழ்வின் துவக்க காலத்தில் நாம் பெறும் அருளடையாளங்கள்வழி நாம் கிறிஸ்துவில் புதுவாழ்வைப் பெறுகின்றோம். மண்பாண்டத்தில் எடுத்துச் செல்லப்படும் இவ்வாழ்வில் பலவேளைகளில் நாம் சோதனைகளையும் துன்பங்களையும் மரணத்தையும் சந்திக்கிறோம். பாவத்தின் காரணமாக நாம் இந்த புதிய வாழ்வை இழந்துவிடவும் கூடும். ஆகவே இயேசு கிறிஸ்து, திருஅவை அங்கத்தினர்களுக்கான தன் மீட்புப்பணியை திருஅவை மூலமாக தொடர ஆவல் கொண்டார், அதுவும் குறிப்பாக, பாஸ்கா மறையுண்மையிலிருந்து வழிந்தோடும் ஒப்புரவு எனும் அருளடையாளம் மூலமாக. நாம் பெறும் மன்னிப்பு என்பது நம் முயற்சிகளின்மூலம் கிட்டுவதல்ல, மாறாக, நம்மை இறைவனோடும், உடன்வாழும் ஒவ்வொருவருடனும் ஒப்புரவாக்கும் தூய ஆவியின் கொடை. இந்த அருளடையாளக் கொண்டாட்டம் தனிமனித விடயம் எனினும், இயேசு கிறிஸ்துவில் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் தூய ஆவியின் பிரசன்னத்தைக் கொண்டிருக்கும் திருஅவை சமூகத்தில் தன் மூலத்தைக் கொண்டுள்ளது. நாம் நம் பாவங்களை எந்தக் குருவிடம் அறிக்கையிடுகிறோமோ அவர் கடவுளின் பிரதிநிதியாக மட்டுமல்ல, நம் மனமாற்றத்தின் பாதையில் நம்மோடு இணைந்துவரும் திருஅவை சமூகத்தின் பிரதிநிதியாகவும் உள்ளார். இந்த அருளடையாளம் ஓர் அரும்பெரும்செல்வம் எனினும், நம்முடைய சோம்பல் மற்றும் மனக்குழப்பம் காரணமாகவோ, பாவம் மற்றும் அதன் விளைவுகளின் தீவிரம் குறித்த நம் உணர்வுகள் குறைந்து வருவதன் காரணமாகவோ இதனை ஒதுக்கி வைப்பதற்கான சோதனைக்கு நாம் உள்ளாகலாம். பலவேளைகளில் நாம் அனைத்துப்பொருட்களின் மையமாகவும் அளவீடாகவும் நம்மையே எண்ணிக்கொண்டு செயலாற்றும்போது, நம் வாழ்வு நீரின்மீது அலைக்கழிக்கப்படுவது போன்ற நிலைக்குத் தள்ளப்படக்கூடும். ஒப்புரவு அருளடையாளம் இறைவனை நோக்கி நம்மை மீண்டும் அழைத்துச் செல்வதோடு, அவரின் முடிவற்ற இரக்கம் மற்றும் மகிழ்வுடன் நம்மை அரவணைக்கிறது. இறைவனின் குழந்தைகளாக நாம் புதுப்பிக்கப்படவும், இறைவனுடனும், நமக்குள்ளும், உடன்வாழ் ஒவ்வொருவருடனும் நாம் ஒப்புரவாக உதவும் நோக்கில் இறையன்பு நம்மில் செயல்பட அனுமதிப்போமாக.
இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை, தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், தன் உரையின் இறுதியில், உக்ரைன் நாட்டு மக்களுக்கு செபிப்பதற்கான விண்ணப்பம் ஒன்றையும் முன்வைத்தார்.
உக்ரைன் தலைநகர் கீவில் அண்மை நாட்களில் இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் மனவருத்தத்தைத் தருபவைகளாக உள்ளன என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், தான் உக்ரைன் மக்களுக்கு தன் அருகாமையை உணர்த்த விரும்புவதாகவும், வன்முறைகளுக்குப் பலியானோர், காயமுற்றோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காகச் செபிப்பதாகவும் எடுத்துரைத்தார். போரிடும் தரப்புகள் அனைத்தும் நாட்டின் அமைதி மற்றும் இணக்கவாழ்வை மனதில்கொண்டு வன்முறை நடவடிக்கைகளைக் கைவிடவேண்டும் என விண்ணப்பிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். மறைபோதகத்தின் இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.








All the contents on this site are copyrighted ©.