2014-02-19 15:02:59

குடும்ப விவசாயம், ஆப்ரிக்காவின் மிக முக்கியமான தேவை - FAO தலைமை இயக்குனர்


பிப்.19,2014. குடும்ப விவசாயத்தில் ஈடுபடுவது, ஆப்ரிக்காவில் உள்ள இளையோருக்கும், பெண்களுக்கும் மிக முக்கியமான தேவை என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பன்முக உயிரினங்கள் (Biodiversity) பற்றி, இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றிய, ஐ.நா. உணவு வேளாண்மை நிறுவனமான FAOவின் தலைமை இயக்குனர், José Graziano da Silva அவர்கள் இவ்வாறு கூறினார்.
FAOவின் உதவியுடன் ஆப்ரிக்காவின் 38 நாடுகளில், 350க்கும் மேற்பட்ட சமுதாயக் குழுக்கள் மத்தியில், குடும்ப விவசாயம் என்ற முயற்சி, 10,000க்கும் அதிகமான இடங்களில் துவங்கப்பட்டுள்ளது என்றும், இம்முயற்சியில் இளையோர் ஆர்வமாய் ஈடுபட்டுள்ளனர் என்றும், Graziano da Silva அவர்கள் எடுத்துரைத்தார்.
பாரம்பரிய விவசாய முறைகள் அடுத்தத் தலைமுறையினர் மத்தியில் அறிமுகமாவதும், இளையோரும் பெண்களும் வேலை வாய்ப்புப் பெறுவதும் இத்தகைய குடும்ப விவசாய முயற்சிகள் வழங்கும் நன்மைகள் என்று FAO இயக்குனர், Graziano da Silva அவர்கள் சுட்டிக்காட்டினார்.
2014ம் ஆண்டு, குடும்ப விவசாயத்தின் அகில உலக ஆண்டென ஐ.நா.வால் கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் UN








All the contents on this site are copyrighted ©.