2014-02-19 15:05:36

அமைதி ஆர்வலர்கள் –1907ல் நொபெல் அமைதி விருது பெற்றவர்கள்


பிப்.19,2014. இத்தாலியரான எர்னெஸ்தோ தெயோதோரோ மொனெத்தா, ப்ரெஞ்ச் நாட்டவரான லூயி ரெனால்ட் ஆகிய இருவரும் 1907ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பகிர்ந்து கொண்டவர்கள். இத்தாலியரான மொனெத்தா, பத்திரிகையாளர், தேசியவாதி, புரட்சிகரமான படைவீரர், இத்தாலிய அமைதி இயக்கத் தலைவர் மற்றும் போரொழிப்புக் கோட்பாட்டாளர். தற்போதைய ஐரோப்பிய சமுதாய அவையின் அதிகாரப்பூர்வ விருதுவாக்கான, “பன்மையில் ஒன்றிணைந்திருத்தல்”(varietate unitas) என்ற விருதுவாக்கைக் கொண்டிருந்தவர். ஆழமான சமயப்பற்று உள்ளவர். அதேசமயம் குருக்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்பவராகவும் இருந்தார். இத்தாலியில் ஆஸ்ட்ரிய ஆக்ரமிப்புக்கு எதிராக 1848ம் ஆண்டில் எழுந்த "மிலானின் 5 நாள்கள்" என்ற இயக்கத்தில் தனது 15வது வயதில் பங்கேற்றார் மொனேத்தா. தனது குடும்பப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக, தனது தந்தையின் அருகிலிருந்து போரிட்டார். மூன்று ஆஸ்ட்ரிய படைவீரர்கள் அவரருகிலே இறப்பதைப் பார்த்தார். இவ்ரேயாவில் இராணுவப் பள்ளியிலும் இவர் பயிற்சி பெற்றார். 1859ம் ஆண்டில் கரிபால்டியின் ஆயிரத்தின் படையெழுச்சி என்ற அமைப்பிலும் சேர்ந்து 1866ம் ஆண்டில் ஆஸ்ட்ரியர்களுக்கு எதிராக இத்தாலிய இராணுவத்தில் சேர்ந்து போரிட்டார். இவருக்கு அதிகத் தேசப்பற்று இருந்தாலும், பின்னர் அனைத்துலக அமைதி ஆர்வலராக மாறினார். 1867க்கும் 1896க்கும் இடைப்பட்ட காலத்தில் Il Secolo என்ற மிலான் சனநாயக தினத்தாளின் ஆசிரியராக இருந்தார் எர்னெஸ்தோ மொனெத்தா.
மிலானின் முடியாட்சி குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த மொனேத்தா, எப்பொழுதும் மகிழ்ச்சியானவராக, கொள்கையில் உறுதிப்பாடு உள்ளவராக இருந்தார். 1887ம் ஆண்டில் லொம்பார்தி அமைதிக் கழகத்தை நிறுவினார். இக்கழகம் ஆயுதக்களைவுக்கும், ஐக்கிய நாடுகள் நிறுவனமும் உருவாவதற்கும் அழைப்பு விடுத்தது. இதனால் 1907ம் ஆண்டில் Louis Renault என்பவருடன் சேர்ந்து நொபெல் அமைதி விருதைப் பகிர்ந்து கொண்டார் மொனெத்தா. எனினும், மொனேத்தாவில் இருந்த தேசப்பற்று அவரின் வாழ்வின் இறுதிக் காலத்தில் மீண்டும் துளிர்விட்டது. இவர் 1912ம் ஆண்டில் இத்தாலி லிபியாவைக் கைப்பற்றியதற்கும், 1915ம் ஆண்டில் முதல் உலகப் போரில் இத்தாலி இணைவதையும் பொதுப்படையாக ஆதரித்தார். இவர் தனது வாழ்வின் கடைசி 30 ஆண்டுகளில், 19ம் நூற்றாண்டில் போர்கள், எழுச்சிகள் மற்றும் அமைதி என்ற நான்கு தொகுப்புக்களுக்குச் செய்திகளைச் சேகரித்தார். இவை 1903, 1904, 1906, 1910 ஆகிய ஆண்டுகளில் வெளியானது. இவர் தனது முதல் தொகுப்பில் எழுதிய, 19ம் நூற்றாண்டில் அனைத்துலக அமைதியின் வளர்ச்சி என்ற நூல் பலரில் ஆர்வத்தைத் தூண்டியது.
மொனேத்தாவின் அமைதிக்கான உழைப்பு வெறும் இலக்கியப் படைப்போடு நின்றுவிடவில்லை. 1895ம் ஆண்டில் நடந்த அனைத்துலக அமைதிக் கூட்டத்துக்கு இத்தாலிய பிரதிநிதியாக இவர் சென்றார். அமைதிக்காக பல வழிகளில் உழைத்த மொனேத்தா, இறுதியில் தனது 85வது வயதில் நிமோனியாவால் தாக்கப்பட்டு 1918ம் ஆண்டில் இறந்தார்.
1907ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பகிர்ந்து கொண்ட பிரான்ஸ் நாட்டு Louis Renault, அனைத்து நாடுகளின் சட்டப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் மேற்கொண்ட துடிப்பான பங்களிப்பு நன்மதிப்பையும் கவுரவத்தையும் உலக அளவில் பெற்றுக் கொடுத்தவர். பேராசிரியர் பணியே தனது வாழ்வாகக் கொண்டிருந்தவர். பிரான்சின் Autunல் 1843ம் ஆண்டு மே 21ம் தேதி பிறந்த Renault, அறிவுத்தாகத்தைத் தனது தந்தையிடமிருந்து பெற்றார். அறிவாளியான Renault எப்பொழுதும் முதல் மாணவராகத் திகழ்ந்து மெய்யியல், கணிதம், இலக்கியம் ஆகிய பாடங்களில் பரிசுகளைப் பெற்றார். 1861 முதல் 1868ம் ஆண்டுவரை பாரிசில் சட்டம் பயின்றார். அச்சமயத்தில் ஒரு முனைவர் பட்டமும், மற்ற இரண்டு சிறப்புப் பட்டங்களையும் பெற்றார். Renault தனது 25வது வயதில் உரோமன் மற்றும் வணிகச் சட்டப் பேராசிரியராகப் பணியைத் தொடங்கினார். 1873ல் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, குற்றவியல் சட்டத் துறையில் பகுதிநேரப் பேராசிரியராகச் சேர்ந்தாலும், இவரது தாகமெல்லாம் அனைத்துலகச் சட்டம் பற்றியதாக இருந்தது. இந்தத் துறையில் தற்காலிகமாக கிடைத்த பேராசிரியர் பணியைப் பயன்படுத்தி கட்டுரைகளையும் பல குறிப்புக்களையும் நூலையும் வெளியிட்டார். இப்படைப்புகள் Renaultக்கு 1881ல் அனைத்துலகச் சட்டத்துறைக்குத் தலைமைப் பொறுப்பைப் பெற்றுக் கொடுத்தது.
Louis Renault, பேராசிரியர் பணியோடு ஆராய்ச்சிப் பணியையும் தொடர்ந்தார். 252 முனைவர் பட்ட ஆய்வுகளை வழிநடத்தியிருக்கிறார். இவரது மாணவர்கள் பலர் பிரான்சில் முக்கியமான தூதரகப் பதவிகளைக் கொண்டிருந்தனர். 1890ம் ஆண்டில் அனைத்துலகச் சட்டத்தின், குறிப்பாக, இலக்கியம், கலை, கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி அமைத்தல் போன்ற சொத்துரிமைக நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் குழுவில் பங்கெடுத்தார். அனைத்துலகச் சட்டத்தைப் பொறுத்தவரை பிரான்ஸ் நாடு இவர் ஒருவரையே சார்ந்து இருந்தது. அதன்பின் இருபது ஆண்டுகளுக்கு, ஐரோப்பாவில் நடந்த குறிப்பாக, பன்னாட்டுப் போக்குவரத்து, தனியார் சட்டம், இராணுவ விமானம், கப்பல் விவகாரங்கள், வெள்ளை இனத்தவரின் அடிமைத்தன ஒழிப்பு, செஞ்சிலுவை சங்க ஒப்பந்தத்தைச் சீரமைத்தல் இப்படி எண்ணற்ற பன்னாட்டுக் கருத்தரங்குகளுக்கு இவர் பிரான்சின் பிரதிநிதியாகப் பங்கெடுத்தார். இவரின் அசாதாரண திறமையைப் பாராட்டி 1903ல் பிரான்சின் முழு அதிகாரம் பெற்ற தூதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். அனைத்துலக வழக்குகள் விசாரிக்கப்படுவதற்கு Hague நீதிமன்றம் திறக்கப்பட்டபோது அதன் 28 நீதிபதிகளில் ஒருவராக இருந்தார் Renault. 1914ம் ஆண்டில் Hagueல் உருவாக்கப்பட்ட அனைத்துலகச் சட்ட நிறுவனத்தின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1905ல் ஜப்பானுக்கும், ஜெர்மனி பிரான்ஸ் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கும் இடையேயான வரி பிரச்சனையைத் தீர்த்து வைத்தார். 1909ல் ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையேயான Casablanca வழக்கைத் தீர்த்து வைத்தார். 1899ம் ஆண்டில் நடந்த முதல் Hague அமைதி கருத்தரங்கில் இவர் செய்தித் தொகுப்பாளராகவும், 1907ல் நடந்த இரண்டாவது Hague அமைதிக் கருத்தரங்கில் பல முக்கிய விவகாரங்களுக்குத் தொகுப்பாளராகவும் இருந்தார். அசாதாரண அறிவாளியான Louis Renaultன் திறமைகளை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவர் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதே கிடையாது. 1981ம் ஆண்டு பிப்ரவர் 6ம் தேதி இவர் தனது கடைசி வகுப்பை முடித்து அவரது Barbizon நாட்டுப்புற இல்லத்துக்கு விடுமுறைக்காகச் சென்ற சமயம் நோயால் தாக்கப்பட்டு அதற்கு அடுத்த நாள் மரணமடைந்தார்.








All the contents on this site are copyrighted ©.