2014-02-19 15:12:01

அணு ஆயுத எதிர்ப்பு - அருள் சகோதரிக்கு மூன்றாண்டுகள் சிறை


பிப்.19,2014. அணு ஆயுதங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, அமெரிக்காவில் யுரேனியம் சேமிப்புக் கிடங்கு ஒன்றில் அத்துமீறி நுழைந்ததற்காக, 84 வயது நிறைந்த அருள் சகோதரி ஒருவருக்கு சுமார் மூன்றாண்டுகள் – 35 மாதங்கள் - சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் டென்னெஸி மாநிலத்தில் உள்ள Oak Ridge என்ற இடத்தில் அமைந்திருக்கும் இந்த யுரேனியம் சேமிப்புக் கிடங்கில் 2012ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வேறு இருவருடன் சேர்ந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, அருள் சகோதரி Megan Rice மற்றும் அவ்விருவருக்கும் இந்தத் தண்டனை வழங்கப்பட்டது.
ஏனைய இருவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பு கூறப்பட்டபோது, நீதிமன்றத்தில் இருந்த அருள் சகோதரி Megan Rice அவர்கள், தான் செய்த செயல் குறித்து தனக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்றும், இதைச் செய்வதற்கு தான் 70 ஆண்டுகள் காத்திருந்தது குறித்து மட்டுமே தனக்கு வருத்தம் இருப்பதாகவும் கூறினார்.
இந்த எதிர்ப்பாளர்கள், மிகவும் பாதுகாக்கப்பட்ட இந்தக் கிடங்கில், பாதுகாப்பு வேலியை வெட்டி ஊடுருவி உள்ளே நுழைந்து, அங்கு கண்டன வாசகங்கள் அடங்கிய விளம்பர அட்டைகளை தொங்கவிட்டனர் என்று கூறப்படுகிறது.

ஆதாரம் RNS








All the contents on this site are copyrighted ©.